# ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

> ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியானது முழுமையாகச் சென்றடைவதை உறுதிசெய்ய அமைக்கப்பட்ட மாநில மன்றத்தின் முதல் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (04.08.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2026-27ஆம் நிதியாண்டிற்கான மேம்பாட்டுச் செயல்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதுடன், நிதியானது முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், திட்டத்தின் செயல்பாடுகளை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
- **Published**: 2026-08-04
- **URL**: https://news.nammamap.in/press-release/22279-chief-minister-adi-dravidar-tribal-development-council-meeting

---

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், 2026-27ஆம் நிதியாண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியானது முழுமையாகச் சென்றடைவதை உறுதிசெய்ய மேம்பாட்டுச் செயல்திட்டச் சட்டம் (தமிழ்நாடு அரசு சட்டம் 20/2024) 29.05.2024 அன்று இயற்றப்பட்டது.

முதலமைச்சர் தலைமையில், ஒதுக்கப்படும் நிதி முறையாகச் சென்றடைகிறதா என்பதைக் கண்காணித்திட மாநில மன்றம் அமைக்கப்பட்டது.

2026-27ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு மதிப்பீட்டில், ஆதிதிராவிடர் நலத்திட்டத்திற்காக 5,903.51 கோடி ரூபாயும், பழங்குடியினர் நலத்திட்டத்தற்காக 349 கோடி ரூபாயும் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2026-27ஆம் நிதியாண்டிற்கான மேம்பாட்டுச் செயல்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஒதுக்கப்படும் நிதியானது பயனாளிகளின் பயன்பாட்டிற்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், திட்டத்தின் செயல்பாடுகளை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மேம்பாட்டுச் செயல்திட்டத்தின்கீழ், குறித்தொதுக்கப்பட்ட நிதியை செயல்படுத்தும் துறைகளின் மாதாந்திர செலவின விவரம், பணி முன்னேற்ற அறிக்கை மற்றும் பயனாளர்களின் விவரம் போன்றவற்றை Development Action Plan என்ற வலைதளத்தில் (https://www.adtwdap.tn.gov.in) தவறாமல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கு இடையூறாகவுள்ள தடைகளைக் கண்டறிந்து அவற்றைக் களைந்திட உரிய பரிந்துரைகளைத் தெரிவிக்கவும், அதற்குரிய திட்டங்களை விரைந்து தீட்டவும் அனைத்துத் துறைச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)