# வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழையின்போது, எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- **Published**: 2026-09-08
- **URL**: https://news.nammamap.in/press-release/22459-cm-review-northeast-monsoon-preparedness-tamil-nadu

---

பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களுக்கும், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தலைமையில் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் நியமனம்.

வெள்ளம் பாதித்த இடங்கள் மற்றும் ஏனைய பகுதிகளில் நடைபெறும் பணிகளை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் உயர் அலுவலர்களைக் கொண்ட குழுவினர் வாரம் இருமுறையாவது ஆய்வுசெய்து தயார்நிலையில் வைத்திருத்தல்.

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும், அனைத்துத் துறை அலுவலர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்துதல்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மாநகராட்சி நிர்வாகம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மீன்வளத்துறை, மின்சார வாரியம், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுதல்.

மழைநீர் விரைவாக வெளியேறும் வகையில் நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை அகற்றுதல் மற்றும் கால்வாய்கள், மழைநீர் வடிகால்களைத் தூர்வாருதல்.

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நிறைவுபெறாமல் இருக்கும் குடிநீர், கழிவுநீர்க் கால்வாய்கள், மற்றும் சாலைப் பணிகளை உடனடியாகச் செய்து முடித்தல்.

அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின் கம்பிகள், பலவீனமான மின் கம்பங்களை உடனடியாக மின்துறையினர் சீரமைத்தல்.

வெள்ள நீரை உடனடியாக வெளியேற்ற மின்மோட்டார்கள், சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த மின் ரம்பங்கள், JCB போன்றவற்றை தயார்நிலையில் வைத்திருத்தல்.

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களைப் பாதுகாப்பாகத் தங்கவைக்க சமூக நலக்கூடங்கள், பள்ளிகள் ஆகியவற்றைத் தயார்நிலையில் வைத்திருத்தல்.

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிட சமுதாய உணவுக் கூடங்களை தயார்நிலையில் வைத்திருத்தல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)