# பெருநகர சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

> ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், உணவுத் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் Dr.ரா.குமார் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்துப் பணிகளையும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திடவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
- **Published**: 2026-09-18
- **URL**: https://news.nammamap.in/press-release/22557-ministers-review-monsoon-preparedness-chennai-alandur-adyar

---

ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க கட்டமைப்புகளை விரைந்து முடித்திட வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் மழைநீரை உடனடியாக அகற்ற மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைத்து பயன்படுத்த வேண்டும்.

மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.

சுரங்கப் பாதைகளில் மின் மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் CCTV கண்காணிப்பு வசதிகள் அனைத்தும் செயல்படும் நிலையில் உள்ளதை உறுதி செய்திட வேண்டும்.

மழைக்காலத்தில் பணியாளர்கள் சுழற்சி முறையில் 24/7 பணியில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் உள்ள கால்வாய்கள் மற்றும் ஓடைகளில் தூர்வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு முழுமையாக முடித்திட வேண்டும்.

தண்ணீர் வெளியேறும் முக்கிய பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து குப்பைக் கழிவுகள், வண்டல், ஆகாயத்தாமரை மற்றும் கட்டுமானக் கழிவுகள் ஆகியவற்றை அகற்றிட வேண்டும்.

ஆலந்தூர் மண்டலத்தில் 12 நிவாரண மையங்களும், 3 சமையல் கூடங்களும் மற்றும் அடையாறு மண்டலத்தில் 19 நிவாரண மையங்களும், 10 சமையல் கூடங்களும் குடிநீர், கழிப்பறை, மின்சாரம், ஜெனரேட்டர் வசதிகளுடன் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

முதியவர்கள், கர்ப்பிணிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் ஆகியோரின் விவரங்களை முன்கூட்டியே அறிந்து அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி தேவையான சேவைகளை மேற்கொள்ள வேண்டும்.

அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின் கம்பிகள், கேபிள்கள், பலம் குறைந்த மின்கம்பங்கள் ஆகியவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

சாலைகளில் தேங்கும் வெள்ள நீரை உடனடியாக வெளியேற்ற மின் மோட்டார்கள் மற்றும் சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த மின் ரம்பங்கள், ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் வாகனங்களையும், மழைநீர் தேங்கும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் படகுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து முழு ஈடுபாட்டுடன் போர்க்கால அடிப்படையில் பணியாற்றிட வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)