# செய்தி வெளியீடு - வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- **Published**: 2026-09-21
- **URL**: https://news.nammamap.in/press-release/22570-cm-monsoon-dengue-preparedness-meeting

---

கடல் நீர் உட்புகுதல், கடல் அரிப்பு மற்றும் வெள்ளப்பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட வேண்டும்; பாதிப்புக்குள்ளாகக்கூடிய கடலோரக் கிராமங்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் விவரங்கள் தயாராக இருப்பதை உறுதிசெய்திட வேண்டும்.

மீனவர்களுக்கு வானிலை மற்றும் கடல் எச்சரிக்கைகள் உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்.

வெள்ளப் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் பயன்பாட்டிற்குத் தயாராக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் தேவைக்கேற்ப நிவாரண முகாம்களாக பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும், மேலும் குடிநீர், உணவு, மின்சாரம், கழிப்பறை மற்றும் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அவசரகால மீட்புக் குழுக்கள், படகுகள், உயிர்காக்கும் மிதவைகள், கயிறுகள், மின்உற்பத்தி இயந்திரங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் பிற எச்சரிக்கை வழிமுறைகள் மூலம் தகவல் வழங்கப்பட வேண்டும்; செயற்கைக்கோள் தொலைபேசி உள்ளிட்ட அவசரகால தகவல் தொடர்பு சாதனங்கள் செயல்படும் நிலையில் தயாராக இருக்க வேண்டும்.

சேமிப்புக் கிடங்குகளில் இருப்பில் வைத்திருக்கும் நெல் மூட்டைகள் மழைநீரால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

சாலைகள், மழைநீர் வடிகால்கள், பாலங்கள் ஆகியவற்றை ட்ரோன் மூலமாக ஆய்வு செய்து, பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பருவமழைக் காலங்களில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

எல்-நினோ எனும் காலநிலை மாற்ற நிகழ்வு - பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவின் முதற்கட்ட ஆய்வறிக்கை வழங்கப்பட்டது.

கொசுப்புழு ஒழிப்புப் (DBC) பணியாளர்கள் மூலம் வீடுதோறும் களஆய்வு செய்து, Aedes கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அகற்ற வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனைப் பெறவும், கொசு உற்பத்தியைத் தடுக்கும் முறைகளைப் பற்றியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் டெங்கு காய்ச்சலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், ஆய்வகப் பரிசோதனைகள், நோயாளியின் மருத்துவ மதிப்பீடு, எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிதல், சிகிச்சை, திரவ சிகிச்சை வசதிகள், தீவிர டெங்கு நோயாளிகளுக்கான சிகிச்சை, தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கு தயார்நிலையில் இருக்க வேண்டும்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையோடு தொடர்புடைய பிற துறைகளும் ஒருங்கிணைந்து கொசு உற்பத்தியாகும் இடங்களை அகற்றுதல் மற்றும் சுற்றுப்புறத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)