# சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் -II, வழித்தடம் 4-ன் முதற்பகுதி மற்றும் 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் தொடக்கம்

> மாண்புமிகு இந்தியப் பிரதமர், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர் முன்னிலையில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் -II, வழித்தடம் 4-ன் முதற்பகுதியான 14.64 கி.மீ நீளத்திலான உயர்மட்ட வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவை மற்றும் 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களைத் தொடங்கி வைத்தனர்.
- **Published**: 2026-10-11
- **URL**: https://news.nammamap.in/press-release/22713-chennai-metro-phase-two-corridor-four-inauguration

---

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் -II, வழித்தடம் 4-ன் முதற்பகுதி (14.64 கி.மீ) மற்றும் 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் தொடக்கம்.

சென்னை மெட்ரோ இரயிலின் இரண்டாம் கட்டத் திட்டமானது இந்தியாவிலேயே ஒரே கட்டத்தில் செயல்படுத்தப்படுகின்ற மிகப்பெரிய மெட்ரோ இரயில் திட்டமாகும்.

கட்டம் II-ல், வழித்தடம் 3, வழித்தடம் 4 மற்றும் வழித்தடம் 5 என மொத்தம் மூன்று வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மொத்த நீளம் 118.9 கிலோ மீட்டர் ஆகும். இத்திட்டத்தில் 128 மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

தொடங்கப்பட்ட வழித்தடம் வடபழனி சந்திப்பு மெட்ரோ இரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டு, வழித்தடம் 2 மற்றும் சென்னை - திருப்பெரும்புதூர் தொழில்துறை வளாகத்தை எளிதில் சென்றடைய உதவுகிறது.

இவ்வழித்தடம் ஆளில்லா இரயில் இயக்கம் (UTO), தானியங்கி இரயில் கட்டுப்பாட்டு அமைப்பு (ATC), தானியங்கி இரயில் பாதுகாப்பு அமைப்பு (ATP), மேம்பட்ட தகவல் தொடர்பு அடிப்படையிலான இரயில் கட்டுப்பாட்டு அமைப்பு (CBTC) மற்றும் பயணிகள் பாதுகாப்புக் கதவுகள் (PSD) போன்ற மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் செயல்படும்.

வழித்தடம் 4-ன் இரண்டு இரயில் தடங்களின் மேலாக வழித்தடம் 5-ன் இரண்டு இரயில் தடங்கள் அமைக்கப்பட்டுள்ள 3.70 கி.மீ நீள இரட்டை அடுக்கு மெட்ரோ பகுதி இத்திட்டத்தின் தனித்துவமான அம்சமாகும்.

பொதுப் போக்குவரத்து மற்றும் சாலை உட்கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து, சுமார் 1.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச்சாலை உயர்மட்ட சாலை பிரிப்புப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)