# செய்தி வெளியீடு: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

> பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இரவு முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர். சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர்த் தேக்கமின்றி சீரான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. காலை நேரத்திற்குள் மாநகரில் இயல்பு நிலை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
- **Published**: 2026-10-18
- **URL**: https://news.nammamap.in/press-release/22766-chennai-heavy-rain-rescue-operations-normalcy-restored

---

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

இரவு முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர்த் தேக்கமின்றி சீரான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் இரவு முழுவதும் கள ஆய்வுகளை மேற்கொண்டு, மழைநீர் அகற்றும் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்தனர்.

மழைநீரை வெளியேற்றுவதற்காக 650 மின் மோட்டார் பம்புகள் மற்றும் டிராக்டர்களில் பொருத்தப்பட்ட பம்புகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

வெள்ள பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) ஒரு குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் (TNDRF) 4 குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

தற்போது, அனைத்து முக்கிய பேருந்து வழித்தடச் சாலைகளிலும், மழைநீர் தேங்கிய பெரும்பாலான தெருக்களிலும் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.

மழைநீர் தேங்கியிருந்த அனைத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டு, காலை 6 மணிக்குள் அனைத்து சுரங்கப்பாதைகளும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 9 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மழையின் காரணமாக உயிரிழப்புகளோ, பெரிய அளவிலான விபத்துகளோ ஏற்படவில்லை. நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒருங்கிணைந்த தீவிர நடவடிக்கைகளால், காலை நேரத்திற்குள் மாநகரில் இயல்பு நிலை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)