# வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

> வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
- **Published**: 2026-10-23
- **URL**: https://news.nammamap.in/press-release/22821-northeast-monsoon-agriculture-preparedness-review-meeting

---

உழவர் செயலி மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வானிலை சார்ந்த பயிர் ஆலோசனைகளை களஅலுவலர்கள் மூலம் பரவலாக்கம் செய்ய வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் அசாதாரண வானிலை சூழலால் ஏற்படும் பயிர்ச் சேதங்களை குறைத்திட, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் (TNAU) தயாரிக்கப்பட்ட மாவட்ட அளவிலான இடையேற்பாட்டுத் திட்டத்தைப் பின்பற்றி தகுந்த மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான இடுபொருட்களான தரமான விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போதுமான அளவில் இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள கண்காணிப்பு குழுக்கள், வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பயிர்ச் சேதம் குறித்த விவரங்களை சேகரித்து அரசுக்கு தினசரி தெரிவிக்க வேண்டும்.

கனமழையால் வயலில் நீர் சூழும் பட்சத்தில், விவசாய நிலங்களிலிருந்து உபரி நீரை வெளியேற்ற அனைத்து களப்பணியாளர்களும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மழைக்காலத்தில் ஏற்படும் பூச்சி நோய் தாக்கம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை தொடர்ந்து கண்காணித்து பயிர்ச் சேதத்தை குறைத்திடும் வகையில் தகுந்த பரிந்துரைகளை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்.

நடப்பு சம்பா பருவத்தில் ஏற்படும் எதிர்பாராத பயிர் இழப்புகளைச் சமாளிக்க, பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு (PMFBY) திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வேளாண்மை/ தோட்டக்கலை துறையை சார்ந்த அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து, பருவமழைக் காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டு விவசாயிகளுக்கு பொருளாதார சேதம் ஏற்படாத வகையில் களப்பணியாற்ற வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)