TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
பெண்கள் பாதுகாப்பு; சட்டம் ஒழுங்கு

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (09.06.2026) சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைக்கும் விதமாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை வெளியிட்டு, அதற்கென வடிவமைக்கப்பட்ட வாகனத்தையும் அறிமுகப்படுத்தினார்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது உத்தரவில், பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு, ஒரு சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்றும், ஆபத்தில் உள்ள பெண்களுக்கு உதவிட, இப்படையினரின் இருப்பை வெளிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்த இந்த சிறப்புப்படை போதுமான ஆளிநர்கள் / பணியாளர்கள் மற்றும் நவீன வசதிகளுடன் மாநிலம் முழுவதும் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவினைச் செயல்படுத்திடும் வகையில், "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" என்ற சிறப்புக் காவல்படையை உருவாக்குவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற நாளான 10.05.2026 அன்றே அரசாணை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாநிலம் முழுவதும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு, 2,545 புதிய பணியிடங்களை உருவாக்க ஆணை பிறப்பித்துள்ளார். புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்களில் 49 காவல் ஆய்வாளர்கள், 2 காவல் ஆய்வாளர்கள் (தொழில்நுட்பம்), 641 காவல் உதவி ஆய்வாளர்கள், 3 காவல் உதவி ஆய்வாளர்கள் (தொழில்நுட்பம்), 1,843 காவலர்கள் மற்றும் 7 அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் அடங்குவர். இந்தப் படைக்கான காவலர்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். மேலும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் பயன்பாட்டிற்காக, 319 நான்கு சக்கர வாகனங்களும் 101 இருசக்கர வாகனங்களும் கொள்முதல் செய்யப்படும். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்வதற்காக, நிகழ்நேரக் காணொளி ஒளிபரப்புத்திறன் கொண்ட கேமராக்கள் பொருத்திய உடுப்புகளும் (Body Worn Cameras with live streaming) மற்றும் அணுகமுடியாத, கடினமான நிலப்பரப்புகளில் கண்காணிப்பதற்கான ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Drones) உள்ளிட்ட மேம்பட்ட உபகரணங்களும் வழங்கப்படும். கூடுதலாக, படையின் திறமையான செயல்பாட்டிற்குத் தேவையான அலுவலக உபகரணங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக காவல்துறை தலைவர் (Inspector General of Police) நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் செயல்பட இருக்கும் 270 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கள அலகுகளின் பணிகளைக் கண்காணித்து மேற்பார்வையிடுவதற்காக, தலைமையகத்தில் அவருக்கு உதவியாக ஒரு காவல் கண்காணிப்பாளர், இரண்டு துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு காவல் ஆய்வாளர்கள், எட்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் இருபது காவலர்கள் இடம் பெறுவார்கள். இதன் செயல்பாட்டிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். தற்போது, மாநிலம் முழுவதும் 70 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைப் பிரிவுகள் தற்போது பணியிலுள்ள 140 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 420 காவலர்களுடன் செயல்படத் தொடங்கும். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர், குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து கண்காணித்தல், பொது இடங்களில் கண்காணிப்பை மேம்படுத்தி, சுற்றுக்காவல் பணிகள் மேற்கொண்டு, குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து, பொது இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குதல், பேருந்து நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் செல்லக்கூடிய மற்றும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில், காவல்துறையின் இருப்பை அதிக அளவில் வெளிப்படுத்தி, சட்டவிரோத செயல்களைத் தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில், அணுகுவதற்குக் கடினமான மற்றும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளில் திறம்படக் கண்காணிப்பதற்கும், ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்காகவும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினரால் ட்ரோன் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும். மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமத்துறை, கல்வி நிறுவனங்கள், அரசாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட முகமைகளுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பொதுமக்கள் பங்களிப்புடன், பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பணிகளையும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொள்வர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சமரசமற்ற கொள்கையை உறுதி செய்வதற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைக்கப்பட்டது
  • 2
    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினை மற்றும் அதற்கென வடிவமைக்கப்பட்ட வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது
  • 3
    2,545 புதிய பணியிடங்களை உருவாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது
  • 4
    319 நான்கு சக்கர வாகனங்களும் 101 இருசக்கர வாகனங்களும் கொள்முதல் செய்யப்படும்
  • 5
    நிகழ்நேரக் காணொளி ஒளிபரப்புத்திறன் கொண்ட கேமராக்கள் பொருத்திய உடுப்புகளும் (Body Worn Cameras) மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களும் (Drones) வழங்கப்படும்
  • 6
    திட்டத்திற்காக 354 கோடி ரூபாய் நிதி மற்றும் செயல்பாட்டிற்காக 2.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது
  • 7
    மாநிலம் முழுவதும் 270 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கள அலகுகள் செயல்படும்
  • 8
    தற்போது 70 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைப் பிரிவுகள் 140 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 420 காவலர்களுடன் செயல்படத் தொடங்கும்
  • 9
    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும்

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்