TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
அரசு கொள்கை / பொதுத்துறை நிறுவனங்கள்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்யக்கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் எழுதியுள்ள கடிதம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி. இந்தியா) இந்திய அரசின் பங்குகளை, 2% அடிப்படை பங்குகள் மற்றும் 1% கூடுதல் பங்குகள் ஒதுக்கீட்டு விருப்பம் உள்ளிட்ட 3% வரையிலான 'விற்பனைக்கான சலுகை' மூலம் விற்பனை செய்யும் முடிவுகுறித்து தமிழ்நாடு அரசின் வருத்தத்தைத் தெரிவிக்கும் முகமாக, முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விரிவான சுருக்கம்

தமிழ்நாடு அரசு, என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைக்கும் எந்தவொரு முடிவையும் கொள்கை ரீதியாக ஆட்சேபிக்கிறது. என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது தோற்றம், வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகள் என அனைத்திலும் தமிழ்நாட்டுடன் இரண்டறக் கலந்திருப்பதால் இவ்விவகாரம் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். என்.எல்.சி. இந்தியாவின் தலைமையகம் நெய்வேலியில் அமைந்துள்ளதுடன், அதன் முதன்மையான பழுப்பு நிலக்கரி சுரங்கச் செயல்பாடுகளும், அனல் மின் நிலையங்களும் இங்குதான் அமைந்துள்ளன. இந்நிறுவனம், மாநில அரசு நிர்வாகத்தின் விரிவான வசதி வாய்ப்புகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, மறுவாழ்வு நடவடிக்கைகள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன், மாநில அரசு வாயிலாகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பல தசாப்தங்களாகக் கட்டப்பட்டுள்ளது. இது வெறும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் மட்டுமல்லாமல், எரிசக்தி பாதுகாப்பு, கனிமவள மேம்பாடு மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த தேசிய சொத்து என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைப்பது, அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் பொது உடைமைத் தன்மைக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றும், மாநிலத்தின், மாநில மக்களின் நீண்டகால நலன்கள், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதிப்பதாக அமையும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இத்தகைய பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து முழுமையாக அரசின் உரிமையிலும் கட்டுப்பாட்டிலும் மட்டுமே நீடிக்கவேண்டும் என்பதால், இந்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
  • 2
    தமிழ்நாடு அரசு என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் மேலும் பங்குகள் குறைப்பதை கொள்கை ரீதியாக ஆட்சேபிக்கிறது.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்