TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
நலத்திட்டங்கள் மற்றும் மறுவாழ்வு

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான புதிய வீடுகள் கட்டுமானப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தலைமையில், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான புதிய வீடுகள் கட்டுமானப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.க.தென்னரசு அவர்கள் தலைமையில், இன்று (17.06.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 29 மாவட்டங்களில் உள்ள 105 தற்காலிக முகாம்களில் 19,710 குடும்பங்களைச் சார்ந்த 56,638 நபர்கள் வசித்து வருகிறார்கள். 28 மாவட்டங்களில் உள்ள 77 இலங்கைத் தமிழர்கள் முகாம்களில் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளுக்கு பதிலாக 10,469 புதிய வீடுகள் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் நிதி உதவி உடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் கட்டப்பட்டு வருகிறது. இதில், 24 மாவட்டங்களில் உள்ள 52 இலங்கைத் தமிழர் முகாம்களில் 6,010 புதிய வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது 17 மாவட்டங்களில் உள்ள 30 முகாம்களில் கட்டப்பட்டுவரும் 4,459 வீடுகளின் கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அமைச்சர் அவர்கள் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை பெற்றுத் தரவும், முகாம் பதிவு விவரங்களில் இடம்பெறாத இலங்கைத் தமிழர்களை முகாம் பதிவுகளில் சேர்க்கவும், வீட்டு கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து வீடுகளை ஒப்படைக்கவும், திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு விரைவில் திறப்பு விழா ஏற்பாடு செய்யவும் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
  • 2
    இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
  • 3
    முகாம் பதிவு விவரங்களில் இடம்பெறாத இலங்கை தமிழர்களை முகாம் பதிவுகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
  • 4
    இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீட்டு கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து, வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்.
  • 5
    திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு விரைவில் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யுமாறும்.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்