ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
மாண்புமிகு அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முக்கிய திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 27.05.2026 அன்று நடைபெற்றது, அதில் அலுவலர்களுக்கு விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, 27.05.2026 அன்று மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் முக்கிய திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஊரகப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் எனத் தெரிவித்த அமைச்சர், ஊரக மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்குவதையும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும் இத்துறையின் மகத்தான சேவை என்று குறிப்பிட்டார். மேலும், திட்டப்பணிகளின் தரம், உரிய காலத்தில் பணிகளை முடித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் போன்ற திட்டங்களை திறம்பட செயல்படுத்துதல், சிறுபாசன ஏரிகளை புதுப்பித்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களையும் படித்த இளைஞர்களையும் பணிகளில் ஈடுபடுத்துதல், விவசாயிகளுக்கு வண்டல் மண் இலவசமாக வழங்குவதை உறுதி செய்தல் மற்றும் ஊரக கட்டமைப்புகளை முறையாக பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு விரிவான அறிவுரைகளை அலுவலர்களுக்கு வழங்கினார்.
முக்கிய அறிவிப்புகள்
- 1தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக ஊரகப் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும். மேற்கண்ட பணிகளில் எவ்விதமான சுணக்கமும் இல்லாமல் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
- 2திட்டங்களை செயல்படுத்தும்போது பணிகளின் தரத்தில் எவ்வித குறைபாடும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- 3பணிகளை உரிய காலத்தில் முடித்து செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.
- 4சாலைகள் மற்றும் பாலங்களின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது.
- 5மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
- 6ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- 7மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து, அனைவருக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- 8தூய்மை பாரத இயக்கம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு குப்பைகளை தரம்பிரித்து 100% அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
- 9சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பான பணிகளை எடுத்து செய்ய வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இத்திட்டத்தை விளக்கி நல்ல பல பணிகளை செய்ய வேண்டும்.
- 10ஊரகப் பகுதிகளில் உள்ள சிறுபாசன ஏரிகளை நல்ல முறையில் புதுப்பிக்க வேண்டும்.
- 11மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வண்டல் மண் இலவசமாக வழங்கப்படும் என்ற சிறப்பான அறிவிப்பினை செயல்படுத்தி, அதன் பயன் அனைவருக்கும் கிடைக்குமாறு பணிபுரிய வேண்டும். அதில் எவ்வித சுணக்கம் இன்றி புகார்களுக்கு இடமளிக்காவண்ணம் செயல்படுத்தப்பட வேண்டும்.
- 12ஊரகப்பகுதிகளில் உள்ள தெருக்கள் தூய்மையாக பராமரிக்கப்படுவதோடு தெருவிளக்குகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
- 13சிறுசிறு பணிகளைச் செய்வதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான பயிற்சியையும் முறையாக வழங்க வேண்டும்.
- 14பணிகளின் தரத்தை உறுதி செய்ய உள்ளுரில் உள்ள படித்த பெண்கள் மற்றும் இளைஞர்களைக் கொண்ட குழுக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- 15எல்லா பணிகளையும் முறையாக வீடியோ பதிவு செய்து பென்டிரைவ் உடன் Bill settle செய்ய வேண்டும்.
- 16மேற்கண்ட அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றி நமது துறையை சிறந்த துறையாக மாற்ற அனைவரும் இணைந்து பணிபுரிய வேண்டும்.