மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் வில்லிவாக்கம் வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
மாண்புமிகு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் தலைமையில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (14.05.2026) நடைபெற்றது.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டல அலுவலகக் கூட்டரங்கில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (14.05.2026) நடைபெற்றது. வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வார்டுகளான 94, 95, 96, 97, 98, மற்றும் 104 பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், கட்டடப் பணிகள், பொதுப் பணிகள், பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு அரங்குகள், கால்நடைக் காப்பகங்கள், மயான பூமி மேம்பாட்டுப் பணிகள், இறைச்சிக் கூடங்கள், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டுப் பணிகள், மின் துறை சார்ந்தப் பணிகள் மற்றும் சிறப்புத் திட்டப் பணிகள் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். மேலும், சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம், தமிழ்நாடு மின்சாரம் வாரியம், மாவட்ட வருவாய்த் துறை, குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பொதுப் பணித் துறை, நீர்வளத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாக வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக காவல் துறை அலுவலர்களிடமும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் அவர்களின் அறிவுரைகளின்படி, ஊழலற்ற தூய்மையான நிர்வாகம், விரைவான திட்டச் செயலாக்கம், பெண்களின் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் கட்டுப்பாடு, டாஸ்மாக் கடைகள் இடமாற்றம், சாலை சீரமைப்பு, பட்டா வழங்குதல், மின்விளக்குகள் அமைத்தல், மின்மாற்றிகள் உயரம், துணை மின் நிலையங்கள், பெண்கள் ஒப்பனை அறைகள், கண்காணிப்பு கேமராக்கள், நியாயவிலைக் கடைகள், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள் அமைப்பது, நாய் தொல்லைகள் மற்றும் கால்நடை கட்டுப்பாடு போன்ற பல விஷயங்கள் குறித்து அமைச்சர் அறிவுறுத்தினார். பின்னர், வார்டு-94, அன்னை சத்தியா நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.
முக்கிய அறிவிப்புகள்
- 1குறிப்பிட்ட காலத்திற்குள் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற வேண்டும்
- 2பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
- 3போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்
- 4பெண்கள் செல்லும் பாதைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றி ஊரின் வெளிப்புறப் பகுதியில் கொண்டு செல்ல வேண்டும்
- 5கல்விக் கூடத்திற்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மேலும் குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
- 6சாலைகளை சீரமைத்திட வேண்டும்
- 7அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்டாவை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
- 8தேவையான இடங்களில் மின்விளக்குகள் அமைத்திட வேண்டும்
- 9உயரம் குறைவாக உள்ள மின்மாற்றிகளை உரிய வழிகாட்டுதலின்படி உயர்த்தி வைக்க வேண்டும்
- 10தடையின்றி மின்சாரம் வழங்கிடவும், துணை மின் நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
- 11பெண்களுக்கான தனி ஒப்பனை அறைகள் அமைத்திட வேண்டும்
- 12மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
- 13காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வருபவர்களிடத்தில் கண்ணியமான முறையில் புகார்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
- 14அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் வைத்திட வேண்டும்
- 15மின்தடை தொடர்பாக மக்கள் மின்துறை அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி 94987 94987 என்பதை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்திட வேண்டும்
- 16மக்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்கப்பட வேண்டும்
- 17பெரும்பாலான நியாய விலைக் கடைகள் சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
- 18வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
- 19நாய் தொல்லைகளை கட்டுப்படுத்துவதற்கும், கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிவதைப் கட்டுப்படுத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
- 20ஊழலற்ற தூய்மையான நிர்வாகம் மற்றும் திட்டங்களை எந்த ஒரு தவறும் இன்றி உரிய காலத்தில் சிறப்பாக நிறைவேற்றிட வேண்டும்
- 21வார்டு-94, அன்னை சத்தியா நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.