TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
நலத்திட்டம்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களில் மிக முக்கியமான திட்டமான "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்", அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக வடிவமைக்கப்பட்டு, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விரிவான சுருக்கம்

வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களில் மிக முக்கியமான திட்டமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" அறிவிக்கப்பட்டு, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சார்ந்த தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். தமிழர் பாரம்பரியத்தில், "தாய்மாமன் சீர்" என்ற மரபின்படி, தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் விதமாகவும், தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ₹755.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது, அத்துடன் ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோர மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டம் துவக்கி வைக்கப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம், புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையை திட்டமிடுதல், மற்றும் கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தாய் சேய் நலனை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசுக்கு உள்ள முன்னுரிமையை எடுத்துக்காட்டுகின்றன.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • 2
    தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
  • 3
    இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ₹755.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 4
    இத்திட்டத்திற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோர மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
  • 5
    22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள்.
  • 6
    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செப்டம்பர் 15, 2026 அன்று இத்திட்டம் துவக்கி வைக்கப்படும்.

Related Announcements & Press Releases