Bharat Tex 2026 சர்வதேச ஜவுளி கண்காட்சி மற்றும் மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்பு - தொழில் முனைவோர் மற்றும் தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல்
புதுதில்லியில் நடைபெற்ற பாரத் டெக்ஸ் 2026 சர்வதேச ஜவுளி கண்காட்சி மற்றும் மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்று, தமிழ்நாட்டின் அரங்குகளைப் பார்வையிட்டனர். மேலும், தொழில் முனைவோர் மற்றும் தொழில் முதலீட்டாளர்களுடன் தமிழ்நாட்டில் ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.
விரிவான சுருக்கம்
புதுதில்லி, பாரத் மண்டபத்தில் இந்திய ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள பாரத் டெக்ஸ் 2026 சர்வதேச ஜவுளி கண்காட்சி மற்றும் மாநாடு, ஜூலை 14 அன்று தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டினை மாண்புமிகு ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் அவர்கள், மாண்புமிகு தொழில்துறை மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் செல்வி. S.கீர்த்தனா அவர்கள் மற்றும் மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு. எம். விஜய் பாலாஜி அவர்கள் ஆகியோருடன் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில், மாண்புமிகு தமிழ்நாடு அரசின் தொழில்துறை மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் செல்வி.S.கீர்த்தனா அவர்கள், மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. எம். விஜய் பாலாஜி அவர்கள் மற்றும் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை முதன்மைச் செயலாளர் திரு. தி. ந. வெங்கடேஷ், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரங்கில் இடம்பெற்றிருந்த கைத்தறி, துணிநூல், கதர் மற்றும் SIPCOT அரங்குகளைப் பார்வையிட்டனர். கண்காட்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விரும்பும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விரிவான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாண்புமிகு அமைச்சர்கள், முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தொழில் முனைவோர் மற்றும் தொழில் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலில், தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் நிலவும் முதலீட்டு வாய்ப்புகள், தொழில்துறை உள்கட்டமைப்பு வசதிகள், ஏற்றுமதி மேம்பாடு, மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தி, திறன் மேம்பாடு மற்றும் புதிய தொழில் முனைவோர் ஈர்ப்பதற்கான அரசின் பல்வேறு முயற்சிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு உகந்த கொள்கைச் சூழல், உலகத் தரத்திலான திறமையான மனிதவளம் மற்றும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் விரைவான நிர்வாக ஆதரவு ஆகியவை குறித்து தொழில் முனைவோர்களிடம் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கோ-ஆப்-டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் திருமதி. இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் திருமதி. பி. உமா மகேஸ்வரி, இ.ஆ.ப., சிப்காட் தலைமைச் செயல் அலுவலர் திருமதி. கேதரின் சரண்யா, இ.ஆ.ப. ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் விளக்கப்பட்டது
- 2தொழில்துறை உள்கட்டமைப்பு வசதிகள், ஏற்றுமதி மேம்பாடு, மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தி, திறன் மேம்பாடு மற்றும் புதிய தொழில் முனைவோரை ஈர்ப்பதற்கான அரசின் முயற்சிகள் எடுத்துரைக்கப்பட்டது
- 3தொழில்முனைவோர்களுக்கு தமிழ்நாட்டின் தொழில்முனைவோருக்கு உகந்த கொள்கைச் சூழல், உலகத்தரம் வாய்ந்த திறமையான மனிதவளம் மற்றும் விரைவான நிர்வாக ஆதரவு குறித்து விளக்கமளிக்கப்பட்டது