பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன், மாவட்ட அளவில் கல்விக் கடன் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் (Educational Loan Facilitation Officer) விரைவான சேவை வழங்கப்படும் - மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் அறிவிப்பு
பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் மாவட்ட அளவில் கல்விக் கடன் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் (Educational Loan Facilitation Officer) வழங்கப்படும் என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் 06.07.2026 அன்று நடைபெற்ற உயர்கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில், பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கையினை மேலும் அதிகரிப்பதற்கும், பொருளாதார காரணங்களால் எந்தவொரு மாணவரும் உயர்கல்வியை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படாத வகையிலும், தகுதியான மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் (Collateral Free Education Loan) வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கல்விக்கடன் வழங்குவதை திறம்பட செயல்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உதவி பேராசிரியர் நிலையில் ஒருங்கிணைப்பு அலுவலர் (Facilitation Officer) ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சேவைக்கென ஒவ்வொரு ஒருங்கிணைப்பு அலுவலருக்கும் பிரத்தியேகமான அலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்கள், பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணாக்கர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் வழங்குவார்கள். மேலும் மாவட்ட முன்னணி வங்கி மேலாளருடன் தொடர்பு கொண்டு மாணவர்களுக்கும், வங்கிக்கும் இணைப்பு பாலமாக செயல்படுவர். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் பொறுப்பு அலுவலர் (Nodal Officer) அவர்களுடன் இணைந்து செயல்படுவார்கள். பெறப்படுகின்ற கல்விக் கடன் குறித்த தகவல்கள் மற்றும் வங்கி விவரங்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தொடர்ந்து தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், அனைத்து வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கல்விக் கடன் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி வங்கி வாரியாக மாணாக்கர்களுக்கு கல்விக்கடன் எளிதாகவும், விரைவாகவும் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார். இம்முன்னெடுப்பின் மூலம், உயர்கல்வித் துறையில் மாணாக்கர் சேர்க்கை மேலும் அதிகரிக்கும். இந்நிகழ்வின் போது, கல்லூரிக் கல்வி ஆணையர் திரு.பி.பொன்னையா,இ.ஆ.ப., தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் திரு.பி.ரத்தின சாமி,இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் வழங்கப்படும்.
- 2மாவட்ட அளவில் கல்வி கடன் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் (உதவி பேராசிரியர்கள் நிலையில்) நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழிகாட்டி, வங்கிகளுடன் தொடர்பு ஏற்படுத்துவார்கள்.
- 3மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கல்விக் கடன் விநியோக செயல்முறையை திறம்பட மற்றும் குறித்த நேரத்தில் நடைபெறுவதை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுப்பார்கள்.
- 4உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பொருளாதார காரணங்களால் இடைநிற்றலைத் தடுக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.