மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 'மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்' மற்றும் 'ஒரு புதிய தொடக்கம்' என்ற காலப்பேழை புத்தகம் வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், தனது அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை விளக்கிடும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட 'மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்' மற்றும் 'ஒரு புதிய தொடக்கம்' என்ற காலப்பேழை புத்தகங்களை வெளியிட்டார்.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.8.2026) தலைமைச் செயலகத்தில், இவ்வரசு பொறுப்பேற்று 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை விளக்கிடும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட 'மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்' மற்றும் 'ஒரு புதிய தொடக்கம்' என்ற காலப்பேழை புத்தகம் (Coffee Table Book) ஆகியவற்றை வெளியிட்டார். இவ்வரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவுற்றதை முன்னிட்டு, கடந்த 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளைத் துறைவாரியாகத் தொகுத்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் 'தமிழரசு' சார்பில் 'மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்' தயாரிக்கப்பட்டுள்ளது. இச்சாதனை மலரானது, இவ்வரசு பொறுப்பேற்ற நூறு நாட்களில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், துறைகளின் சாதனைகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட கள ஆய்வுப் பணிகள், துறைவாரியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், முக்கிய நிகழ்வுகளின் உரைத் தொகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், 'ஒரு புதிய தொடக்கம்' என்ற காலப்பேழை புத்தகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள், அவை தொடர்பான விளக்கங்கள், தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், வளர்ச்சி திட்டப் பணிகள் போன்றவற்றை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப. ஆகியோர் கலந்துகொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1'மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்' வெளியீடு
- 2'ஒரு புதிய தொடக்கம்' என்ற காலப்பேழை புத்தகம் வெளியீடு