தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த திறனாய்வுக் கூட்டம்
சென்னை கிண்டியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற திறனாய்வுக் கூட்டத்தில், தொழிலாளர் பாதுகாப்பு, நலன் மற்றும் வெளிப்படையான ஆய்வுகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
விரிவான சுருக்கம்
இன்று (22.07.2026) சென்னை கிண்டியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகத்தில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்களின் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களின் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 55,214 தொழிற்சாலைகளில் 27.72 லட்சம் தொழிலாளர்களும், 3,611 கட்டுமானப் பணியிடங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். அனைத்து தொழிலாளர்களின் பாதுகாப்பு, உடல்நலன் மற்றும் நலவசதிகளை உறுதி செய்யவும், ஆய்வுகளை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ளவும் அமைச்சர் உத்தரவிட்டார். இத்துறை மூலம் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் இணையவழி வாயிலாக மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும், ஆய்வறிக்கைகளை உடனடியாக இயக்கக வளைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். அம்மோனியா பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் விபத்துக்களை தவிர்க்க 21 குழுக்கள் அமைத்து சிறப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 28 தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தங்குமிடங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்திட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் 1,140 பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்துக்களை தவிர்க்க 12 சிறப்பு குழுக்கள் அமைத்து தொடராய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழிலாளர்களின் உயிருக்கு உடனடியான அபாயகரமான சூழல்களைக் கொண்ட 130 தொழிற்சாலைகளில் உற்பத்தியினை நிறுத்த தடையாணைகள் வழங்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குழந்தை தொழிலாளர்கள் மற்றும் அபாயகரமான பணிகளில் வளரிளம் பருவத்தினர் பணிபுரிவதை தடுக்கவும், தொழிலாளர்களுக்கு காலமுறை மருத்துவப் பரிசோதனைகளை உறுதிப்படுத்தவும் அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சிறப்பு தீயணைப்பு வாகனங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் திரு. கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் திரு. செ. ஆனந்த் மற்றும் இவ்வியக்கக அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1ஆய்வின் போது தொழிலாளர் பாதுகாப்பு, உடல்நலன் மற்றும் நலவசதிகளை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு.
- 2ஆய்வுகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- 3அனைத்து துறை சேவைகளும் இணையவழி வாயிலாக வழங்கப்பட வேண்டும்.
- 4இணையவழி ஒதுக்கப்படும் தொழிற்சாலைகளின் ஆய்வறிக்கைகள் இயக்கக வலைதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
- 5அம்மோனியா பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் விபத்துக்களை தவிர்க்க 21 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 28 தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தங்குமிடங்கள் மாற்ற உத்தரவு.
- 6விருதுநகரில் 1,140 பட்டாசுத் தொழிற்சாலைகளில் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொள்ள 12 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- 7உடனடி அபாயகரமான சூழல்களில் இயங்கி வந்த 130 தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
- 8குழந்தை தொழிலாளர்களை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.
- 9அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவதை தடுக்க தீவிர ஆய்வுகள்.
- 10ஊறுவிளைவிக்கும் மற்றும் அபாயகரமான பணிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு காலமுறை மருத்துவப் பரிசோதனைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.