எல்-நினோ தாக்கங்கள் குறித்து கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனை வழங்கவும் தமிழ்நாடு அரசு நிபுணர் குழு அமைத்தது
எல்-நினோ தாக்கங்களைக் கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழையில் பற்றாக்குறை மற்றும் நீர்நிலைகளில் குறைந்த நீர் இருப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. பாதுகாப்பான குடிநீர் மற்றும் கால்நடை பராமரிப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி, எல்-நினோ காரணியால் மாநிலத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் பாதிப்புகளை தொடர்ந்து கண்காணிக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை குறித்து ஆலோசனை வழங்கவும் 28.07.2026 அன்று தமிழ்நாடு அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இக்குழுவின் முதல் கூட்டம் இன்று (04.08.2026) சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் தலைமை தாங்கினார். கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் திரு. நா.முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழை காலக்கட்டங்களான ஜூன், ஜூலை மாதங்களில், வழக்கமாக 133.75 மி.மீ. மழை பொழியும் நிலையில், இந்தாண்டு (2025–2026) மழைப் பொழிவு 111.19 மி.மீ. மட்டுமே பெய்து, வழக்கத்தை விட 16.68% குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், சுமார் 24 மாவட்டங்களில், வழக்கத்தை விட குறைவாகவே தென்மேற்கு பருவமழைப் பொழிந்துள்ளது. செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இயல்பைவிட 60% மேல் குறைவாக தென்மேற்கு பருவமழைப் பொழிந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அணைகளின் கொள்ளளவும், இக்காலக்கட்டத்தில் வழக்கமாக 85% நிரம்பியிருக்கும். ஆனால், இந்தாண்டு வழக்கத்தை விட குறைவான மழைப் பொழிவால், சுமார் 31% மட்டுமே நிரம்பி உள்ளது. பாதுகாப்பான குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தவும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யவும் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகள் வாயிலாக ரூ.330 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் - மீனவர் நலத் துறைக்கு ரூ.10 கோடி என மொத்தம் ரூ.340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் கால்நடைகளுக்கு தீவனம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படாவண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர், பேரிடர் மேலாண்மை ஆணையர் மற்றும் நிபுணர் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1எல்-நினோ தாக்கங்களைக் கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனை வழங்கவும் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
- 2நிபுணர் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.
- 3பாதுகாப்பான குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்த ரூ.330 கோடி நிதி ஒதுக்கீடு.
- 4கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் - மீனவர் நலத் துறைக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
- 5வறட்சி தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க மொத்தம் ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு.
- 6குடிநீர் தட்டுப்பாட்டைத் தடுக்கவும், கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.