TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

பேரிடர் மேலாண்மை; நகர்ப்புற வளர்ச்சி

பெருநகர சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், உணவுத் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் Dr.ரா.குமார் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்துப் பணிகளையும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திடவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்காணித்திட மண்டல வாரியாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், மண்டலக் கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களுக்கான பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் அவர்கள், மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் Dr.ரா.குமார் ஆகியோர் முன்னிலையில், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (18.09.2026) நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அருகில் உள்ள ஃபின்டெக் டவர் (Fintech Tower) கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்காக அடையாறு மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடந்த 15.09.2026 அன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில், கடந்த பருவ மழைக்காலங்களில் மழைநீர் அதிகமாக தேங்கியதாகக் கண்டறியப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டமைப்புகளை விரைந்து முடிப்பதோடு, இதர தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் உடனடியாக அகற்றிட மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைத்து மழைநீரை அகற்றிட வேண்டும். மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்ளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர்கள் அறிவுறுத்தினர். இம்மண்டலங்களில் உள்ள சுரங்கப் பாதைகளில் மின் மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் CCTV கண்காணிப்பு வசதிகள் அனைத்தும் செயல்படும் நிலையில் உள்ளதை உறுதி செய்திட வேண்டும். மழைக்காலத்தில் எப்பொழுதும் பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதிசெய்திடும் வகையில் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணிபுரிவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்காமல் உடனடியாக அகற்றிட வேண்டும். மக்களுக்கு இடையூறின்றியும், சீரான போக்குவரத்து நடைபெறும் வகையிலும் சம்பந்தப்பட்ட துறைகள் காவல்துறையின் ஒருங்கிணைப்புடன் பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் உள்ள கால்வாய்கள் மற்றும் ஓடைகளில் தூர்வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு முழுமையாக முடித்திட வேண்டும். தண்ணீர் வெளியேறும் முக்கிய பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். குப்பைக் கழிவுகள், வண்டல், ஆகாயத்தாமரை மற்றும் கட்டுமானக் கழிவுகள் ஆகியவற்றினை அகற்றி மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆலந்தூர் மண்டலத்தில் 12 நிவாரண மையங்களும், 3 சமையல் கூடங்களும் மற்றும் அடையாறு மண்டலத்தில் 19 நிவாரண மையங்களும், 10 சமையல் கூடங்களும் தயாராக உள்ள நிலையில், இம்மையங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சாரம், ஜெனரேட்டர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் ஆகியோரின் விவரங்களை முன்கூட்டியே அறிந்து அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி தேவையான சேவைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கக்கூடிய சூழலை உருவாக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின் கம்பிகள், கேபிள்கள், பலம் குறைந்த மின்கம்பங்கள் ஆகியவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும். மழைக் காலங்களில் மின் கம்பிகளால் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சாலையில் தேங்கும் வெள்ள நீரை உடனடியாக வெளியேற்ற மின் மோட்டார்கள் மற்றும் சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த மின் ரம்பங்கள், ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் வாகனங்களையும், மழைநீர் தேங்கும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் படகுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து முழு ஈடுபாட்டுடன் போர்க்கால அடிப்படையில் பணியாற்றிட வேண்டும் என மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ஆலந்தூர் மண்டலம், தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க கட்டமைப்புகளை விரைந்து முடித்திட வேண்டும்.
  • 2
    தாழ்வான பகுதிகளில் மழைநீரை உடனடியாக அகற்ற மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
  • 3
    மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.
  • 4
    சுரங்கப் பாதைகளில் மின் மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் CCTV கண்காணிப்பு வசதிகள் அனைத்தும் செயல்படும் நிலையில் உள்ளதை உறுதி செய்திட வேண்டும்.
  • 5
    மழைக்காலத்தில் பணியாளர்கள் சுழற்சி முறையில் 24/7 பணியில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
  • 6
    ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் உள்ள கால்வாய்கள் மற்றும் ஓடைகளில் தூர்வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு முழுமையாக முடித்திட வேண்டும்.
  • 7
    தண்ணீர் வெளியேறும் முக்கிய பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து குப்பைக் கழிவுகள், வண்டல், ஆகாயத்தாமரை மற்றும் கட்டுமானக் கழிவுகள் ஆகியவற்றை அகற்றிட வேண்டும்.
  • 8
    ஆலந்தூர் மண்டலத்தில் 12 நிவாரண மையங்களும், 3 சமையல் கூடங்களும் மற்றும் அடையாறு மண்டலத்தில் 19 நிவாரண மையங்களும், 10 சமையல் கூடங்களும் குடிநீர், கழிப்பறை, மின்சாரம், ஜெனரேட்டர் வசதிகளுடன் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
  • 9
    முதியவர்கள், கர்ப்பிணிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் ஆகியோரின் விவரங்களை முன்கூட்டியே அறிந்து அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி தேவையான சேவைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • 10
    அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின் கம்பிகள், கேபிள்கள், பலம் குறைந்த மின்கம்பங்கள் ஆகியவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
  • 11
    சாலைகளில் தேங்கும் வெள்ள நீரை உடனடியாக வெளியேற்ற மின் மோட்டார்கள் மற்றும் சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த மின் ரம்பங்கள், ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் வாகனங்களையும், மழைநீர் தேங்கும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் படகுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • 12
    அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து முழு ஈடுபாட்டுடன் போர்க்கால அடிப்படையில் பணியாற்றிட வேண்டும்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்