கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்
கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்திட ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகம் மற்றும் தேசிய நீர் மேம்பாட்டு முகமை ஆகியவற்றிற்கு உத்திரவிட வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
விரிவான சுருக்கம்
முதலமைச்சரின் கடிதத்தில், தமிழ்நாடு மாநிலம் இயல்பாகவே மேற்பரப்புநீர் வளங்களில் பற்றாக்குறை கொண்டதாகவும், தனது நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு அண்டை மாநிலங்களைச் சார்ந்தே உள்ளதாகவும், நிலத்தடி நீர் வளமும் கவலைக்கிடமான கட்டத்தை எட்டும் அளவிற்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் தமிழ்நாட்டின் மேற்பரப்புநீர் வளங்களைப் பெருக்குவதற்கான மிக முக்கியமான நீண்டகால வாய்ப்பாகத் திகழ்வதாகவும், குறிப்பாக புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் போன்ற தென் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான அதிகரித்துவரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும் தெரிவித்துள்ளார். தேசிய நீர் மேம்பாட்டு முகமை (NWDA) கோதாவரி – பெண்ணாறு – பாலாறு – வெள்ளாறு இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், தற்போதுள்ள சீரமைப்பு வழியானது காவிரி ஆற்றிற்கு சில கிலோமீட்டர் முன்னதாகவே முடிவதால், கோதாவரி - காவிரி - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இத்திட்டத்தை விரைவாகவும் வெற்றிகரமாகவும் செயல்படுத்துவதற்குத் தேவையான முழு அர்ப்பணிப்புடன் அனைத்து ஒத்துழைப்பும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றும், இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதால் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மிகவும் பயனளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும் தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கும் (NWDA) பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு பிரதமர் அவர்களை வலியுறுத்தியுள்ளார்: தொடர்புடைய பயன்பெறும் மாநிலங்களுடன் ஆலோசனைகளை விரைவுபடுத்தி, நிலுவையில் உள்ள பிரச்சினைகளில் விரைவான உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும்; காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கட்டளைக் கதவணை வரை இந்த இணைப்பை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) இறுதி செய்யவேண்டும்; இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக விரைவான முறையில் (Fast Track Method) அமல்படுத்த நடவடிக்கை எடுத்தல்; மற்றும் இத்திட்டத்தை ஒருங்கிணைந்த மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்திட ஒரு சிறப்பு நோக்கு அமைப்பை நிறுவுவது குறித்துப் பரிசீலிப்பது மற்றும் இத்திட்டத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்தல்.
முக்கிய அறிவிப்புகள்
- 1கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்.
- 2இத்திட்டத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவிக்க வேண்டும்.
- 3விரைவான முறையில் (Fast Track Method) அமல்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
- 4ஒரு சிறப்பு நோக்கு அமைப்பை (Special Purpose Vehicle) நிறுவுவது குறித்துப் பரிசீலிப்பது.
- 5தொடர்புடைய பயன்பெறும் மாநிலங்களுடன் ஆலோசனைகளை விரைவுபடுத்தி, நிலுவையில் உள்ள பிரச்சினைகளில் விரைவான உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.
- 6காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கட்டளைக் கதவணை வரை இந்த இணைப்பை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) இறுதி செய்யவேண்டும்.