TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

நினைவு / மரியாதை

மகாகவி பாரதியார் அவர்களின் நினைவு நாள் - மகாகவி நாளை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மகாகவி பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11, 2026 அன்று 'மகாகவி நாள்' ஆக அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள் திரு. க.தென்னரசு மற்றும் திரு. த.சரத்குமார் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலை அருகே வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

விரிவான சுருக்கம்

தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11, 2026 அன்று 'மகாகவி நாள்' ஆக அனுசரித்தது. மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. க.தென்னரசு மற்றும் மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. த.சரத்குமார் ஆகியோர் சென்னை, மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மகாகவி பாரதியார் 11.12.1882 அன்று தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் சின்னச்சாமி அய்யர் இலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எட்டயபுரத்தில் தொடக்கக் கல்வியை பயின்றார். தமது ஏழு வயதிலேயே அருமையான தமிழ்க் கவிதைகளை விரைந்து இயற்றும் ஆற்றலைப் பெற்றிருந்தார். 11 வயதில் பாரதி (கலைமகள்) என்று புலவர் பெருமக்களால் பட்டம் சூட்டப்பட்டார். தமது 15 வயதில் தந்தையின் மறைவுக்குப் பிறகு சில காலம் காசிக்குச் சென்று ஜெய்நாராயண் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை நன்கு கற்று தேர்ந்தார். 1898-ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றார். 1902-இல் எட்டயபுரம் அரசவையில் பாரதியார் மூன்றாண்டுகள் பணிபுரிந்தார். 1904-இல் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், பின்பு ஜி.சுப்பிரமணிய அய்யர் அவர்களின் அழைப்பின் பேரில் சென்னை வந்து "சுதேசமித்திரன்" பத்திரிகை உதவி ஆசிரியராகவும், 'இந்தியா' வார இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். மேலும் 1910-ஆம் ஆண்டு 'கர்மயோகி' எனும் மாத இதழை தமிழில் நடத்தினார். தமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல் என்ற உறுதியோடு சுதேசமித்திரன், இந்தியா, சக்கரவர்த்தினி, பாலபாரதா போன்ற பல பத்திரிகைகள் மூலம் கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதி மக்கள் உள்ளங்களில் சுதந்திர தாகத்தை வளர்த்தார். தமது தாய்நாட்டை எண்ணிப் பெருமிதம் கொண்டதோடு, அதன் எதிர்காலம் குறித்த தெளிவான தொலைநோக்குப் பார்வையும் கொண்டவராகத் திகழ்ந்த மகாகவி பாரதி, நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர். பெண்ணுரிமைக்காகவும், பெண் விடுதலைக்காகவும் முழக்கமிட்டவர். நூற்றுக்கணக்கான சிறு கவிதைகளோடு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலியின் சபதம் ஆகிய தொடர்கவிதைகளையும் எழுதியுள்ளார். சின்னச் சங்கரன் கதை, ஞான ரதம், சந்திரிகையின் கதை போன்ற நூல்களை எழுதியுள்ளதோடு, தாகூரின் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். மகாகவி பாரதியார் அவர்கள் 12.09.1921 அன்று மறைந்தார். மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவை நினைவு இல்லங்களாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 அன்று "மகாகவி நாள்"-ஆகக் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பில் "மகாகவி நாள்" ஆக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    செப்டம்பர் 11 அன்று "மகாகவி நாள்" ஆக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்