TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அரசு விழா, நினைவு நிகழ்வு

சென்னை முன்னாள் மேயர் சிவராஜ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை முன்னாள் மேயர் சிவராஜ் அவர்களின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் ஆகியோர் இன்று (29.9.2026) சென்னை, தங்கசாலை, மணிக்கூண்டு அருகில் அமைந்துள்ள சென்னை முன்னாள் மேயர் சிவராஜ் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.

மாவட்டங்கள்சென்னை
முக்கிய நபர்கள்P. Venkataramanan, Rajmohan

விரிவான சுருக்கம்

சென்னை முன்னாள் மேயர் சிவராஜ் அவர்கள் 1892-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 29-ஆம் நாள் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் உயர்கல்விப் பயின்று பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞரானார். பின்பு, அக்கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1926-ஆம் ஆண்டு முதல் 1937-ஆம் ஆண்டு வரை சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினராக செயல்பட்டார். 1945 – 1946-ஆம் ஆண்டுகளில் சென்னை மாநகரத்தின் மேயராகவும் விளங்கினார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த முதல் மேயர் என்ற பெருமை இவருக்கு உண்டு. நமது நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக 1957-ஆம் ஆண்டு முதல் 1961-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் நெருக்கமாக சமூகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மறைவுக்குப் பின் அகில இந்திய குடியரசுக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடினார். சென்னை முன்னாள் மேயர் சிவராஜ் அவர்கள் கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கு அரும்பாடுபட்டார். தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது பிறந்த நாளான செப்டம்பர் 29-ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    சென்னை முன்னாள் மேயர் சிவராஜ் அவர்களின் 135-வது பிறந்தநாள் கொண்டாட்டம்.
  • 2
    செப்டம்பர் 29, சென்னை முன்னாள் மேயர் சிவராஜ் அவர்களின் பிறந்தநாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்