TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

சட்டம் மற்றும் ஒழுங்கு; காவல்துறை; முதலமைச்சர் அலுவலகம்

தனது பணியைப் பலரும் பாராட்டும் வகையில் செயல்பட்ட கோவில்பாளையம் காவல் நிலையத் தலைமைக் காவலர் திரு.ம.வேல்முருகன் அவர்களை நேரில் அழைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் பாராட்டினார்.

கோவில்பாளையம் காவல் நிலையத் தலைமைக் காவலர் திரு. ம. வேல்முருகன், தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கடத்தியவர்களை அதிவேக வாகனத்தின் மேற்கூரையில் தாவிப் பிடித்து துணிச்சலுடன் செயல்பட்டதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களால் பாராட்டப்பட்டு, பரிசு வழங்கப்பட்டார்.

விரிவான சுருக்கம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 27.09.2026 அன்று, தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவது குறித்த நம்பகமான தகவலின் அடிப்படையில், ஒரு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்களைக் கொண்ட குழுவினர் கனியூர் சுங்கச்சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்றை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது, ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல், காவல்துறையினர்மீது மோதும் வகையில் அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் வாகனத்தைச் செலுத்தி அங்கிருந்து தப்பிக்க முயன்றார். அச்சமயத்தில், தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட அந்த வாகனத்தின் மேற்கூரையின்மீது கோவில்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் திரு. ம. வேல்முருகன் அவர்கள் தாவி ஏறினார். இதற்கிடையில், குழுவின் மற்ற உறுப்பினர்கள் வாகனத்தைப் பின்தொடர்ந்ததுடன், பிற காவல் குழுக்களுக்கும் தகவல் அளித்தனர். அவர் வாகனத்தின் மேற்கூரையில் இருந்தபோதே, குற்றம் சாட்டப்பட்டவர் வாகனத்தை அதிவேகமாக ஓட்டிச் சென்றார். பின்னர், கூடுதல் காவல் குழுக்களால் அந்த வாகனம் வழிமறிக்கப்பட்டு, தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களைக் கடத்தியதில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் விளாங்குறிச்சிலிருந்து அவிநாசி வரை சுமார் 40 கி.மீ. தூரத்திற்குத் தனது உயிரைப் பணயம் வைத்து, காரின் மேற்கூரையில் படுத்தபடியே சென்று தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு சென்ற கடத்தல்காரர்களைக் கைதுசெய்யக் காரணமாக இருந்த தலைமைக் காவலர் திரு. ம. வேல்முருகன் அவர்களின் துணிச்சலைப் பாராட்டும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள், தலைமைக் காவலர் திரு. ம.வேல்முருகன் அவர்களை இன்று (29.9.2026) தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்துப்பாராட்டி, பரிசு வழங்கினார். அப்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தலைமைக் காவலர் திரு. ம.வேல்முருகன் அவர்களிடம், பணியின்போது கவனமாகவும், பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டுமென்று அறிவுறுத்தினார். இந்நிகழ்வின்போது, காவல்துறை தலைமை இயக்குநர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப. அவர்கள் உடனிருந்தார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமைக் காவலர் திரு. ம.வேல்முருகன் அவர்களின் துணிச்சலைப் பாராட்டினார்.
  • 2
    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைக் காவலர் திரு. ம.வேல்முருகன் அவர்களிடம், பணியின்போது கவனமாகவும், பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்