சென்னை மற்றும் ஆந்திர பிரதேச மீனவர்களிடையே கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்த்து, மீனவர்கள் சுமூகமான மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசு
சென்னை மற்றும் ஆந்திர பிரதேச மீனவர்களிடையே நிலவி வரும் நீண்டகால மீன்பிடிப் பிரச்சனைகளைத் தீர்க்கவும், ஆந்திர அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட சென்னை படகுகளை விடுவிக்கவும் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
விரிவான சுருக்கம்
ஏறத்தாழ 50 ஆண்டுகளாக சென்னை மீன்பிடித்துறைமுகத்தினை தங்குதளமாகக் கொண்டு செயல்படும் மீன்பிடி படகுகள், சென்னைக்கு கிழக்கே வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் மீன்பிடிப் பகுதிகள் வரை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, தங்குகடல் (Multi-day) மீன்பிடிப்பிற்கு செல்லும் சுமார் 200 மீன்பிடி விசைப்படகுகள், ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளில் மீன்பிடிப்பினை மேற்கொண்டு வருகின்றன. சமீப காலங்களில், இதனால் ஆந்திர மாநில மீனவர்களிடையே மீன்வளங்கள் குறையும் என்ற அச்சம் உருவாகி, போராட்டங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டன. இதன் விளைவாக, இந்திய கடல்சார் மண்டலச் சட்டம், 1976-ன் படி, மாநில அரசின் அதிகார எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ள 12 கடல் மைல் தொலைவிற்குள் மீன்பிடிப்பில் ஈடுபட்ட சென்னை மீன்பிடி படகுகளை ஆந்திர அரசு சிறைபிடித்து வருகிறது. தற்பொழுது, சென்னையைச் சார்ந்த 7 விசைப்படகுகள் ஆந்திர மாநிலம் ஜீவலடின் மீன்பிடிதுறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னை மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அமைக்கப்பட்ட இரு மாநில அதிகாரிகள் கொண்ட மாவட்ட அளவிலான குழுக் கூட்டத்தை விரைவாக நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, 11.07.2026 அன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், நெல்லூரில் நடைபெற்ற இரு மாநிலங்களுக்கிடையேயான கூட்டத்தில், தமிழ்நாட்டின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், ஆந்திர மாநிலத்தின் மீன்வளத்துறை ஆணையர், நெல்லூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், சிறைபிடிக்கப்பட்டுள்ள சென்னை மீன்பிடிபடகுகளை உடனடியாக விடுவித்திடவும், சென்னை மீனவர்களின் வாழ்வாதாரத்தினை கருத்திற்கொண்டு, அவர்களை வழக்கம்போல், ஆந்திர மாநில கடற்பகுதிகளில் மீன்பிடித்திட அனுமதிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வாறாக, ஆந்திர-தமிழக கடற்பகுதிகளில் சுமூகமான மீன்பிடிப்பு நடவடிக்கைகளை ஆந்திர அரசுடன் ஒருங்கிணைந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
முக்கிய அறிவிப்புகள்
- 1சென்னை மற்றும் ஆந்திர பிரதேச மீனவர்களிடையே கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- 2தற்பொழுது சென்னையைச் சார்ந்த 7 விசைப்படகுகள் ஆந்திர மாநிலத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
- 3பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு காணும் நோக்கில் இரு மாநில அதிகாரிகள் கொண்ட மாவட்ட அளவிலான குழுக் கூட்டத்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- 411.07.2026 அன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், நெல்லூரில் இரு மாநிலங்களுக்கிடையேயான உயர் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது.
- 5கூட்டத்தில், ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள சென்னை மீன்பிடிபடகுகளை உடனடியாக விடுவித்திடவும், சென்னை மீனவர்கள் வழக்கம்போல் ஆந்திர மாநில கடற்பகுதிகளில் மீன்பிடித்திட அனுமதிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
- 6ஆந்திர அரசுடன் ஒருங்கிணைந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து சுமூகமான மீன்பிடிப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.