மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு
ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர், தமிழ்நாட்டில் தனது உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்குவது, உலகளாவிய திறன் மையங்களை விரிவாக்கம் செய்வது மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். ஃபோர்டு நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான 30 வருட உறவை நினைவுகூர்ந்த முதலமைச்சர், மறைமலைநகர் உற்பத்திச் சாலையை முழுமையாகப் பயன்படுத்தி, உற்பத்தியையும் விரிவாக்கத் திட்டங்களையும் மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டார்.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.7.2026) தலைமைச் செயலகத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. மேத்யூ கோட்லெவ்ஸ்கி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின்போது, ஃபோர்டு நிறுவனம், தமிழ்நாட்டில் தனது உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்குவது பற்றியும், தற்போது நிறுவியுள்ள உலகளாவிய திறன் மையங்கள் விரிவாக்கம் தொடர்பாகவும், இனிவரும் காலங்களில், உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள விரிவாக்கத் திட்டங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஃபோர்டு நிறுவனம், சென்னையில், ஒரு மிகப்பெரிய உலகளாவிய திறன் மையம் ஒன்றினை செயல்படுத்தி வருகிறது. இது 12,000 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும், சமீபத்தில்தான், இந்நிறுவனம், கோயம்புத்தூரில் ஒரு உலகளாவிய திறன் மையம் நிறுவியுள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது உள்ள மறைமலைநகர் உற்பத்திச் சாலையில், 3250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், இன்ஜின்கள் உற்பத்தி தொடங்க உள்ளது. முதலமைச்சர், விரைவில் இந்நிறுவனம் மேற்கொள்ளப்பட உள்ள உற்பத்தித் திட்டத்திற்கு அனைத்து ஒத்துழைப்பையும் அரசு வழங்கும் என்று உறுதியளித்தார்கள். மேலும், மறைமலைநகர் உற்பத்திச் சாலையை முழு அளவிற்கும் பயன்படுத்தி, ஃபோர்டு நிறுவனம், மீண்டும் தனது உற்பத்தியையும், விரிவாக்கத் திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்கள். இந்நிகழ்வில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப., ஃபோர்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி சிமோனெட்டா வெர்டி, உற்பத்திப் பிரிவு இயக்குநர் திரு. தீரஜ் தீக்ஷித், Country Director முனைவர் ஸ்ரீபாத் பட், இயக்குநர் திரு. வி. ராஜா விமல குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின்போது, ஃபோர்டு நிறுவனத்திற்கும் தமிழநாட்டிற்கும் இடையேயான 30 வருட உறவை முதலமைச்சர் நினைவுகூர்ந்தார்.
முக்கிய அறிவிப்புகள்
- 1ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தித் திட்டத்தை தமிழ்நாட்டில் மீண்டும் தொடங்குவது குறித்து விவாதம்
- 2ஃபோர்டு நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையங்களை தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்வது குறித்து விவாதம்
- 3ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தித் துறையில் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து விவாதம்
- 4ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தித் திட்டங்களுக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என முதலமைச்சர் உறுதி
- 5மறைமலைநகர் உற்பத்திச் சாலையை முழுமையாகப் பயன்படுத்தி உற்பத்தியை மீண்டும் தொடங்கி விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ள முதலமைச்சர் கோரிக்கை
- 6மறைமலைநகர் உற்பத்திச் சாலையில் 3250 கோடி ரூபாய் முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்புடன் இன்ஜின்கள் உற்பத்தி தொடங்க உள்ளது