TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு மற்றும் ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.2.23 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டடத்தைத் திறந்து வைத்து, மாதவரம் பால் பண்ணையையும், புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (7.10.2026) சென்னை, மாதவரத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 2 கோடியே 23 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். மேலும், மாதவரம் பால் பண்ணையின் செயல்பாடுகளைப் பார்வையிட்டதோடு, புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரிவான சுருக்கம்

மாதவரம் பால் பண்ணையானது மிகப் பழமையான பால்பதன நிறுவனமாகும். இந்நிறுவனம் 1963-ஆம் ஆண்டு, அரசு மற்றும் யுனிசெஃப் (UNICEF) ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தின் மூலம் மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் நாளொன்றுக்கு 50,000 லிட்டர் பால் பதப்படுத்தும் திறனுடன் நிறுவப்பட்டது. இதன் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, தற்போது நாளொன்றுக்கு சுமார் 4.50 இலட்சம் லிட்டர் பாலைப் பதப்படுத்தும் திறன் பெற்றுள்ளது. ஆவின் மாநில மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டடமானது இந்திய தர நிர்ணய ஆணையம் (Bureau of Indian Standards), இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தரநிலைகளின்படி குடிநீர் சோதனைகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (Tamil Nadu Pollution Control Board) விதிமுறைகளின்படி கழிவுநீர் சோதனைகள் செய்வதற்காக, சென்னை, மாதவரத்தில் 2 கோடியே 23 இலட்சம் ரூபாய் செலவில் அதிநவீன கருவிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகமானது, நவீன உபகரணங்களின் உதவியுடன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் தேவைகளுக்கான அனைத்துத் தரப் பரிசோதனைகளைத் துல்லியமாகவும், விரைவாகவும், சர்வதேச தரநிலைகளுக்கு இணங்கவும் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர மக்களின் எதிர்கால பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மாதவரத்தில் நாளொன்றுக்கு 7 இலட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட புதிய பால் பண்ணை 152 கோடியே 26 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இது முழுமையான வசதிகளுடன் தானியங்கி தொழில்நுட்பத்துடன்கூடிய நவீன பால் பண்ணையாக அமைக்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாதவரத்தில் நடைபெற்றுவரும் புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்ததோடு, இப்பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தினார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    ஆவின் மாநில மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டடம் திறப்பு
  • 2
    மாதவரம் பால் பண்ணையின் செயல்பாடுகள் ஆய்வு
  • 3
    புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகள் ஆய்வு
  • 4
    புதிய பால் பண்ணை கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தல்

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்