மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்து, மேலும் ஆய்வகங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, ரொக்கப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்தார், மேலும் 40 நிலையங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார், 15 திறன் போட்டி வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள், 60 அகில இந்திய தொழிற்தேர்வு வெற்றியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
விரிவான சுருக்கம்
28.10.2026 அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன் வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, இராணிப்பேட்டை, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், தேனி, மதுரை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 5.10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்தார். இதன்மூலம் ஆண்டுதோறும் 9,250 மாணவ, மாணவியர் பயிற்சி பெற்றுப் பயனடைவர். மேலும், 40 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 6.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மின் ஆய்வகங்கள் அமைத்திடுவதற்காக Schneider Electric India Private Limited நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 59-வது மாநில அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியருக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும், அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள 60 மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாண்புமிகு முதலமைச்சர் வழங்கினார். கடந்த ஆண்டு தமிழ்நாடு நான்காம் இடத்தில் இருந்த நிலையில், இவ்வாண்டு இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்காகத் தெரிவு செய்யப்பட்ட 673 புதிய இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் மாண்புமிகு முதலமைச்சர் வழங்கினார். முன்னதாக, அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மாணவர்களின் திறன் படைப்புகளைப் பார்வையிட்டு, டர்னர், வெல்டர், ஹைட்ராலிக் அண்ட் நியூமேட்டிக்ஸ், ரோபோட்டிக்ஸ், மேம்பட்ட CNC மற்றும் லேசர் கட்டிங் ஆய்வகங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் நவீன தொழில்நுட்பப் பயிற்சி வசதிகள் மற்றும் திறன் மேம்பாட்டு உள்கட்டமைப்புகளைப் பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேகமாகச் செயல்படும் ஃபிட்டர் தொழிற்பிரிவில் பயிலும் மாணவ, மாணவியர்களை மாண்புமிகு முதலமைச்சர் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், ஜப்பானின் EHIME NISSAN நிறுவனத்தில் பணியமர்விற்குத் தேர்வு செய்யப்பட்ட சிறப்புத் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் ஜப்பானிய மொழி பயிலும் மாணவர்களை மாண்புமிகு முதலமைச்சர் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தார். இவ்விழாவில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ், சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். அருள் பிரகாசம், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு. கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் டாக்டர் சி. பழனி, இ.ஆ.ப., Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. தீபக் ஷர்மா, அரசு உயர் அலுவலர்கள் தொழில் நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன் 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மேம்பட்ட மின் ஆய்வகங்கள் திறப்பு.
- 240 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்கள் அமைத்திட Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- 359-வது மாநில அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியருக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்குதல்.
- 4அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற 60 மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குதல்.
- 5673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்குதல்.
- 6கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்களின் திறன் படைப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பப் பயிற்சி வசதிகளைப் பார்வையிடுதல்.
- 7காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
- 8ஜப்பானின் EHIME NISSAN நிறுவனத்தில் பணியமர்விற்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களைச் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தல்.