TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

திரைப்பட மானியம் / விருதுகள்

மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் 224 திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அணைக்கிணங்க, 2015 முதல் 2022 வரை தயாரிக்கப்பட்ட 224 திரைப்படங்களுக்கு அரசு மானியத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2015 முதல் 2022 வரை குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட 224 தமிழ்த் திரைப்படங்களுக்கு உடனடியாகத் திரைப்பட மானியத் தொகைகளை வழங்கிட ஆணையிட்டார்கள். அதன்படி, மாண்புமிகு அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் இன்று (30.10.2026) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் 224 தயாரிப்பாளர்களுக்குத் திரைப்பட மானியத்திற்கான காசோலைகளை வழங்கினார். நல்ல கருத்துக்களைத் தெரிவிக்கும் வகையிலும், சமுதாய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் அமைந்த திரைப்படங்களைத் தரமாகவும், சிறிய முதலீட்டிலும் தயாரித்து வெளியிடுவோரை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.எஸ்.கே.கிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான தேர்வுக்குழு, மானியம் பெற விண்ணப்பித்த திரைப்படங்களைப் பார்வையிட்டு, தகுதிவாய்ந்த திரைப்படங்களைத் தேர்வு செய்தது. இக்குழுவினர் 2015 முதல் 2022 வரையிலான 8 ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு 28 திரைப்படங்கள் வீதம் மொத்தம் 224 திரைப்படங்களைத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்தனர். தேர்வு செய்யப்பட்ட 224 திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்குத் தலா 7 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 15 கோடியே 68 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர் வழங்கினார். தமிழ் சினிமா மக்களின் வாழ்க்கை, பண்பாடு, உணர்வுகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளைப் பிரதிபலிப்பதோடு, சமூகத்தில் விழிப்புணர்வையும், மாற்றத்தையும் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றது என்றும், பெண் சிசு கொலை போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் கருத்தம்மா போன்ற திரைப்படங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் அமைச்சர் தெரிவித்தார். வணிக நோக்கத்தைத் தாண்டி, சமூக அக்கறையுடனும் நல்ல கருத்துகளுடனும் சிறந்த படைப்புகளை உருவாக்கி வரும் தயாரிப்பாளர்களைப் பாராட்டினார். கடந்த ஏழு ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான மானியங்கள் மீண்டும் வழங்கப்படுவதன் மூலம் அவர்களுக்குரிய அங்கீகாரமும் மரியாதையும் மீட்டெடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். இனிவரும் காலங்களில் எவ்விதத் தடையுமின்றி திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான விருதுகளும், மானியங்களும் வழங்கப்படும் என்றும், திரைத்துறையின் வளர்ச்சிக்கும், அதனைச் சார்ந்தவர்களின் நலனுக்கும் அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதி அளித்தார். திரைத்துறையினர் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இனிவரும் காலங்களில் தமிழ் சினிமாவிற்கான விருதுகள், கலைமாமணி விருதுகள், மாநில விருதுகள் மற்றும் மானியங்கள் தகுதியினை அடிப்படையாகக் கொண்டு நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் வழங்கப்படும் என்றும், இதுவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உறுதியான வழிகாட்டுதலாகும் என்றும் தெரிவித்தார். முன்னதாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர்கள் முனைவர் இரா. பாஸ்கரன், திரு.கு.தமிழ்செல்வராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட திரைத்துறையைச் சார்ந்த சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    224 திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அரசு திரைப்பட மானியம் வழங்கப்பட்டது.
  • 2
    ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் 7 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 15.68 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
  • 3
    2015 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.
  • 4
    திரைத்துறைக்கு தொடர்ச்சியான ஆதரவு, வெளிப்படையான விருதுகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும்.
  • 5
    திரைத்துறையினரின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்