TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அரசு நிகழ்வு; கொண்டாட்டம்; கலாச்சார

தமிழ்நாடு நாள் விழா

தமிழ்நாடு அரசு நவம்பர் 1, 2026 அன்று தமிழ்நாடு நாள் விழாவை கொண்டாடியது, இதில் சுதந்திரப் போராட்ட வீரர்களும் அறிஞர்களும் கௌரவிக்கப்பட்டனர், மேலும் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டபடி விருதுகளும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன.

விரிவான சுருக்கம்

முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1 மற்றும் 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களின் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18 ஆகிய இரு நாட்களும் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார். அதன்படி, நவம்பர் 1, 2026 அன்று சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. நா. ஆனந்த் தலைமை தாங்கினார். மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன், மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் திரு. வன்னி அரசு, மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திருமதி சி. விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. தமிழ்நாட்டின் எல்லைகளை நிர்ணயம் செய்யப் போராடிய சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், தளபதி விநாயகம், மங்கலங்கிழார், மார்ஷல் நேசமணி, திருவாலங்காடு திருமலைப்பிள்ளை, திருத்தணி ரஷீத், பி.எஸ். மணி, சாம் நத்தாணியேல், தோழர் ஜீவா உள்ளிட்ட பலரது போராட்ட வரலாறுகள் நினைவுகூரப்பட்டன. வாழும் தமிழறிஞர் கவிஞர் கே. ஜீவபாரதி மற்றும் நினைவில் வாழும் தமிழறிஞர்களான பேராசிரியர் ராஜ் கௌதமன், திரு. சாரணபாஸ்கரன் (எ) டி.எம்.எம். அகமது, திரு. சா. கந்தசாமி, திரு. டி.எம். பீர் முகமது ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 இலட்சம் நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் எல்லைக்காக பாடுபட்ட 5 எல்லைக் காவலர்களுக்கு உதவித்தொகை ரூ.7,500/-லிருந்து ரூ.10,000/-ஆக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வழங்கப்பட்டது. 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான 76 தமிழ்ச்செம்மல் விருதாளர்களுக்கு ரூ.25,000/-ம் தகுதியுரையும், பொன்னாடையும் வழங்கப்பட்டது. 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 179 மாணாக்கர்களுக்கு ரூ.15,000/-ம் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    நவம்பர் 1 மற்றும் ஜூலை 18 ஆகிய இரு நாட்களும் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்.
  • 2
    வாழும் மற்றும் நினைவில் வாழும் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 இலட்சம் நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டது.
  • 3
    எல்லைக் காவலர்களுக்கு உதவித்தொகை ரூ.7,500/-லிருந்து ரூ.10,000/-ஆக உயர்த்தப்பட்டது.
  • 4
    2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான 76 தமிழ்ச்செம்மல் விருதாளர்களுக்கு ரூ.25,000/-ம் பொன்னாடையும் வழங்கப்பட்டது.
  • 5
    1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 179 மாணாக்கர்களுக்கு ரூ.15,000/-ம் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்

1 நவ., 2026

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்கவும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக, 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், மற்றும் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கும் இலக்குடன், போதை மருந்துகள் மற்றும் மன மயக்கப் பொருட்கள் சட்டம், 1985-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கென, 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

சுருக்கத்தை வாசிக்க