அடையாறு ஆறு மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணி: மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவுப்படி அமைச்சர் திரு.என்.ஆனந்த் தொடங்கி வைத்து ஆய்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் கிராமம் அடையாறு ஆற்றுப்பகுதியினை தூர்வாரி சீரமைக்கும் பணி மற்றும் சோழிங்கநல்லூர் வட்டம், தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரி சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்து களப்பணியை ஆய்வு செய்தார்.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் இன்று (28–07-2026) காலை 9.00 மணியளவில் சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் கிராமம் அடையாறு ஆற்றுப்பகுதியினை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கி வைத்து கள ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு காலை 11.00 மணியளவில் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம் சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையின் இணைப்பு மேம்பாலம் அருகே அமைந்துள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரி சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்து கள ஆய்வு செய்தார்கள். அடையாறு ஆறு சென்னை நகரின் மூன்று முக்கிய ஆற்றுப்படுகையில் ஒன்றாகும். ஆதனூர் ஏரியில் இருந்து உருவாகி 42.38 கி.மீ நீளத்திற்கு பயணித்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அடையாறு ஆற்றின் நீர்பிடிப்பு பரப்பளவு 808 சதுர.கிமீ ஆகும். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளிலிருந்தும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்தும் உபரி நீரையும், மழை நீரையும் கடலில் கலக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் ஓடும் இந்த ஆற்றில் ஆகாயத்தாமரைகள் மற்றும் மிதவைப் பொருட்கள் நீரோட்டத்தை பாதிக்கின்றன. நீர்வளத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து மேற்கொள்ளும் தூர்வாரும் பணி, விமான நிலைய ஓடுபாதை கீழ் நீரோட்டப்பாதை முதல் திரு.வி.க பாலம் வரை மற்றும் அடையாறு முகத்துவாரத்தில் மேற்கொள்ளப்படுவதால், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், கோடம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் மழை மற்றும் வெள்ள நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை ஆகும். தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் பழவேற்காடு ஏரியிலிருந்து மரக்காணம் உப்பங்கழினி வரை 167 கி.மீ நீளமும் 20 முதல் 100 மீட்டர் வரை மாறுபட்ட அகலமும் கொண்டது. அடையாறு ஆற்றின் பகுதியில் இருந்து முட்டுக்காடு முகத்துவாரம் வரை சுமார் 23.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது. வெள்ளப்பெருக்கு காலங்களில் இக்கால்வாயில் சுமார் 8000 கன அடி மழைநீரானது ஒக்கியம் மடுவு வழியாக வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது. சோழிங்கநல்லூர் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை இணைப்பு மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் ஆகாயத்தாமரை, மிதக்கும் பொருட்கள் மற்றும் கழிவுகள் நீரோட்டத்தை கடுமையாக பாதித்து, மழைக்காலங்களில் நீர்த்தேக்கம், வெள்ள அபாயம், துர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்திக்கு காரணமாகிறது. எனவே, பெருநிறுவனப் பங்களிப்பு மற்றும் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு, மழைக்காலங்களில் மழை நீர் தங்கு தடையின்றி சென்று கடலில் கலக்க வழிவகை செய்யப்படும். பருவ மழை காலத்திற்கு முன்னர் வெள்ள முன்னெச்சரிக்கை பணியாக, தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.விஜய் பாலாஜி, சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.சரவணன், ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.ஹரிஷ், தெற்கு வட்டார துணை ஆணையாளர் திரு.ஆஃப்தாப் ரசூல்,இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் திருமதி.எம்.ஜானகி, நீர்வளத் துறை பொறியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1சென்னை, ஆலந்தூர், மணப்பாக்கம் கிராமம் அடையாறு ஆற்றுப்பகுதியினை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
- 2சென்னை, சோழிங்கநல்லூர், தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
- 3பருவ மழை காலத்திற்கு முன்னர் வெள்ள முன்னெச்சரிக்கை பணியாக, தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
- 4பெருநிறுவனப் பங்களிப்பு மற்றும் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.