மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை மெட்ரோ இரயில் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-I மற்றும் கட்டம்-II பணிகள், செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்களை ஆய்வு செய்தார். அவர் முக்கிய கட்டுமானப் பகுதிகள் மற்றும் இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தைப் பார்வையிட்டார்.
விரிவான சுருக்கம்
29.07.2026 அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-I மற்றும் கட்டம்-II பணிகளின் முன்னேற்றம், முக்கிய கட்டுமானப் பணிகள், இரயில்களை இயக்குவதற்கான தயார்நிலை மற்றும் எதிர்கால மெட்ரோ திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். அவர் முக்கிய செயல்பாட்டுப் பகுதிகள் மற்றும் கட்டுமானப் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். முதலமைச்சர் தனது ஆய்வை அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து நந்தனம் மெட்ரோ இரயில் நிலையம் வரை மெட்ரோ இரயிலில் பயணம் செய்து தொடங்கினார். நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான 'மெட்ரோஸ்' கட்டடத்திலுள்ள இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தைப் (Operation Control Centre) பார்வையிட்டு, மெட்ரோ இரயில்களின் இயக்கத்தைக் கண்காணித்தல் மற்றும் நிர்வகித்தல் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-I மற்றும் II-ன் பணிகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும், எதிர்கால விரிவாக்கப் பணிகள் மற்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கேட்டறிந்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். பயணிகள் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து தங்கள் பயணத்தின் இறுதி இடத்தினைச் சென்றடைவதற்கு (Last Mile Connectivity) ஏற்படுத்தப்பட்டுள்ள இதர போக்குவரத்து வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் 5-வது வழித்தடத்திற்குட்பட்ட கத்திப்பாரா பகுதியில் நடைபெற்று வரும் 'சமச்சீர் ஒற்றைத்தாங்கி' (Balanced Cantilever) மேம்பாலக் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு, அதன் கட்டுமான முறை மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்தார். நிலத்திலிருந்து எந்தவிதத் தூண் தாங்குதலும் இன்றி இக்கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், துல்லியமான திட்டமிடல் மற்றும் தீவிர பாதுகாப்பு நடைமுறைகள் மூலம், முதற்கட்ட மெட்ரோ இரயில் போக்குவரத்திற்கும், சாலைப் போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறுமின்றி இப்பணிகள் சவாலாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், முதலமைச்சர் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம் 4-ல் அமைந்துள்ள போரூர் புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையத்தினை ஆய்வு செய்து, அங்கிருந்து பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் வரையிலும் பின்னர், பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து போரூர் புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் வரையிலும் ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் (Unattended Train Operation - UTO) இயக்கப்படும் மெட்ரோ இரயிலில் பயணம் செய்து சோதனை ஓட்டத்தைப் பார்வையிட்டதுடன், விரைவில் திறக்கப்படவுள்ள புதிய வழித்தடத்தின் செயல்பாட்டு ஆயத்தப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
முக்கிய அறிவிப்புகள்
- 1முதலமைச்சர் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-I மற்றும் கட்டம்-II பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.
- 2முதலமைச்சர் இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தைப் பார்வையிட்டு மெட்ரோ இரயில் செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை குறித்து கேட்டறிந்தார்.
- 3முதலமைச்சர் திட்ட முன்னேற்றம், எதிர்கால விரிவாக்கம் மற்றும் கடைசி மைல் இணைப்பு வசதிகள் குறித்து அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
- 4முதலமைச்சர் சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் 5-வது வழித்தடத்திற்குட்பட்ட கத்திப்பாராவில் நடைபெற்று வரும் சமச்சீர் ஒற்றைத்தாங்கி மேம்பாலக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
- 5முதலமைச்சர் போரூர் புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையத்தை (கட்டம்-II, வழித்தடம் 4) ஆய்வு செய்து, ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் இயக்கப்படும் மெட்ரோ இரயிலில் சோதனை ஓட்டம் மேற்கொண்டு, புதிய வழித்தடத்தின் செயல்பாட்டு ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்தார்.