தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் - சமூக நீதி நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர்கள் சென்னை, அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
விரிவான சுருக்கம்
சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி. பிரபாகர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன், மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு, மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. நெ.மரிய வில்சன், மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். குமார்.ரா ஆகியோர் இன்று (17.9.2026) சென்னை, அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அருகில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் வெங்கட்ட நாயக்கர் சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு 17.09.1879 அன்று மகனாகப் பிறந்தார். சாதியப் பாகுபாட்டினைக் கண்டு வெகுண்டெழுந்து சமூக நீதி காத்திடத் தொடர்ந்து போராடியவர் தந்தை பெரியார் அவர்கள். 'மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை', 'ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம்' என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு, சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து போராடினார். 1924-ஆம் ஆண்டு கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராகப் போராடியதால் 'வைக்கம் வீரர்' என்று மக்களால் அழைக்கப்பட்டார். இந்திய வரலாற்றிலேயே தீண்டாமையையும், சாதிக் கொடுமையையும் எதிர்த்து முதன் முதலாக நடைபெற்ற போராட்டம் என்ற சிறப்பை வைக்கம் போராட்டம் பெற்றது. சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் திகழ்வதற்கு வழிகாட்டியாகவும், தனது இறுதி மூச்சு வரை சுயமரியாதைக் கொள்கைக்காகவே வாழ்ந்தார். தமிழ்நாட்டில் சமூக மாற்றத்தை உருவாக்கி, மக்களிடையே ஒற்றுமையை வளர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பட பெரும்பங்காற்றினார். தந்தை பெரியார் அவர்கள் படிப்பறிவின் மூலமே பகுத்தறிந்து விழிப்புணர்வு பெறமுடியும் என்பதை தன் இலட்சியமாகக் கொண்டு, குடியரசு வார இதழைத் தொடங்கினார். சமுதாயத்தில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளை ஒழித்திட சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை உரிமை என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். தமிழினத்தின் எழுச்சிக்காகப் பாடுபட்டு, சுய மரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி ஆகிய அடிப்படைக் கொள்கைகளால், இன்றும் மக்களின் மனங்களில் வாழ்ந்து வருகிறார். இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்த நாள் சமூக நீதி நாளாக அனுசரிக்கப்பட்டது.
- 2மாண்புமிகு அமைச்சர்கள் சென்னை, அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.