அரசு அருங்காட்சியகத்தில் 30.09.2026, 01.10.2026 ஆகிய இரண்டு நாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றது
அரசுப் பணியாளர்களுக்கு ஆட்சிமொழித் திட்டச் செயற்பாட்டில் ஏற்படும் இடர்பாடுகளைக் களையும் நோக்கில், சென்னை அரசு அருங்காட்சியகத்தில் 30.09.2026, 01.10.2026 ஆகிய இரண்டு நாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
விரிவான சுருக்கம்
அரசுப் பணியாளர்களுக்கு ஆட்சிமொழித் திட்டச் செயற்பாட்டில் ஏற்படும் இடர்பாடுகளைக் களையும் நோக்கில், ஆட்சிமொழி வரலாறும் சட்டமும், ஆட்சிமொழிச் செயலாக்கம், குறிப்புகள், வரைவுகள் எழுதுதல், பிழை நீக்கி எழுதுதல் மற்றும் குறைகளைவு நடவடிக்கைகள் ஆகிய தலைப்புகளில் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் இரண்டு நாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் / கருத்தரங்கம் நடத்தப்பெற்று வருகின்றன. இவ்வாறாக நடத்தப்பெறும் பயிலரங்கில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசுத் துறைகளின் மாவட்ட, மண்டல நிலை அலுவலர்கள், அரசுப் பணியாளர்கள், தன்னாட்சி நிறுவனங்களின் அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். பல்துறை வல்லுநர்களும், தமிழறிஞர்களும் பங்கு பெற்று பல கருத்துகளைத் தெரிவிப்பார்கள். இதனால் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் கிடைக்கின்றன. சென்னையில் அரசு அருங்காட்சியகத்தில் 30.09.2026, 01.10.2026 ஆகிய இரண்டு நாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் நடைபெற்றது. முதல் நாள் "இலக்கணச் செழுமை" என்ற தலைப்பில் முனைவர் அண்ணா கண்ணன் அவர்களும், "மொழிபெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும்" என்ற தலைப்பில் திருமதி த. இளவேனில் முல்லை அவர்களும், "மாதிரி வரைவுகள் குறிப்புகள்" என்ற தலைப்பில் முனைவர் இரா. அன்பரசி அவர்களும், "ஆட்சிமொழித் திட்டச் செயலாக்க அரசாணைகள்" என்ற தலைப்பில் திருமதி ந. நிலா அவர்களும் உரையாற்றினர். இரண்டாம் நாள் "ஆட்சிமொழிச் சட்டம் / வரலாறு" என்ற தலைப்பில் முனைவர் மு. முத்துவேலு அவர்களும், "கணினி வழி தமிழ் வளர்ச்சி" என்ற தலைப்பில் திரு. சிவ. தினகரன் அவர்களும், "இளைய தலைமுறை அரசுப் பணியாளர்களும் ஆட்சிமொழிப் பொறுப்பும்" என்ற தலைப்பில் பேராசிரியர் பாரதி பாலன் அவர்களும் உரையாற்றினர். மொழிபெயர்ப்பாளர் திரு. சீனி. இராசகோபாலன் அவர்களால் அனைத்து அரசு அலுவலர்கள் / பணியாளர்களுக்கு "திறனறித் தேர்வு" நடத்தப்பட்டு பயிற்சியில் கலந்து கொண்ட அரசுப் பணியாளர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த பயிலரங்கம் கருத்தரங்கில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந.அருள் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இரண்டு நாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
- 2பயிற்சியில் கலந்து கொண்ட அரசுப் பணியாளர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.