ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய தொடர் வார விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தீவிர வாகனத் தணிக்கை.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை விடுமுறைகளின் போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் தீவிர வாகனத் தணிக்கையைத் தொடங்கியுள்ளது.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் 13.10.2026 அன்று காலை சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட், நந்தனம் அலுவலகத்தில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய தொடர் வார விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களுக்குத் தேவையான பேருந்து வசதி ஏற்படுத்தவும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாகவும், சென்னை பெருநகரத்திற்குள் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தடுப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்கள், சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA), தென்னக ரயில்வே, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய முக்கிய அமைப்புகளுடன் ஆய்வுக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடமிருந்து வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, 15.10.2026 புதன்கிழமையிலிருந்து தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்னி பேருந்துகளில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 15.10.2026 மாலை முதல் 16.10.2026 காலை வரை தமிழ்நாடு முழுவதும் 1222 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 207 ஆம்னி பேருந்துகளுக்குத் தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தீவிர தணிக்கையின் போது, விதிமீறல்களுக்காக ₹4,18,700/- இணக்கக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டும், ₹68,500 இணக்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தணிக்கையில் அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் பிற குற்றங்களுக்காக 4 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும் இந்தச் சிறப்பு வாகனத் தணிக்கை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும். ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பயணிகளால் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை வாகன உரிமையாளர் ரத்து செய்யும் நேர்வில் அந்தப் பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து அனுமதிச்சான்று ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிக்க வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்:1800 425 6151 மற்றும் மின்னஞ்சல் முகவரி: tc.tn@nic.in. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து மீது போக்குவரத்துத் துறையால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முக்கிய அறிவிப்புகள்
- 1ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறைகளின் போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தீவிர வாகனத் தணிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
- 2பேருந்து வசதிகள், அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்து விவாதிக்க 13.10.2026 அன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
- 315.10.2026 மாலை முதல் 16.10.2026 காலை வரை மாநிலம் முழுவதும் 1222 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன.
- 4207 ஆம்னி பேருந்துகள் விதிமீறல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு, தணிக்கை அறிக்கைகள் மற்றும் இ-சலான்கள் வழங்கப்பட்டன.
- 5விதிமீறல்களுக்காக ₹4,18,700/- இணக்கக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, ₹68,500 வசூலிக்கப்பட்டது.
- 6அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் பிற குற்றங்களுக்காக 4 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன.
- 7அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும் சிறப்பு வாகனத் தணிக்கைகள் தொடரும்.
- 8புகார்களை 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தெரிவிக்கலாம்.
- 9ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டால், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும், இல்லையெனில் அனுமதி ரத்து செய்யப்படும்.