TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

நினைவு நிகழ்வு

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின்நினைவு நாளான "தியாகத் திருநாளை” முன்னிட்டு, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 90-வது நினைவு நாளான "தியாகத் திருநாளை” முன்னிட்டு, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் இன்று (18.11.2026) சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

விரிவான சுருக்கம்

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 90-வது நினைவு நாளான "தியாகத் திருநாளை” முன்னிட்டு, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் இன்று (18.11.2026) சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். செக்கிழுத்த தியாகச் செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாதன் பிள்ளை - பரமாயி அம்மையார் தம்பதியருக்கு 05.09.1872 அன்று மகனாகப் பிறந்தார். அடிப்படைக் கல்வியை ஒட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்விப் படிப்பை தூத்துக்குடியிலும், சட்டக் கல்வியை திருச்சியிலும் பயின்று வழக்கறிஞர் ஆனார். மேலும், சமூக சேவையிலும் அரசியல் பணியிலும் படிப்படியாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர் வ.உ.சிதம்பரனார் அவர்கள். அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்திட அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே "கப்பலோட்டிய தமிழன்” என பெயர் பெற்றார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளால் கோபமடைந்த ஆங்கிலேயர்கள், அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர் மீது வழக்குப் பதிவு செய்து, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக 1908-ஆம் ஆண்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுக்க வைக்கப்பட்டார். தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், தாய்மொழி தமிழ்மொழி மீது கொண்டிருந்த தணியாத பற்றின் காரணமாக பல அரிய நூல்களையும், சுயசரிதையையும் கவிதை வடிவில் எழுதியுள்ளார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். வ.உசிதம்பரனார் அவர்கள் 18.11.1936 அன்று மறைந்தார். நம் தேசத்தின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தும், அயராது பாடுபட்டும், தாய் நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து மறைந்தும் மக்களின் மனங்களில் என்றும் நிறைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் "தியாகத் திருநாள்” –ஆக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.அருள் பிரகாசம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் "தியாகத் திருநாள்” –ஆக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்