தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை சென்னையில் ஆய்வு
தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள், சென்னை மாநகராட்சியின் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், ஏரி மற்றும் கால்வாயில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி உள்ளிட்ட பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செப்டம்பர் மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.
விரிவான சுருக்கம்
தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள், 05.09.2026 அன்று சென்னை மாநகராட்சியின் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்று வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அடையாறு மண்டலத்தில், ஐ.ஐ.டி. பகுதியிலிருந்து வெளிவரும் மழைநீரை பக்கிங்ஹாம் கால்வாயில் செலுத்தும் வகையில், ரூ.13.52 கோடி மதிப்பீட்டில் 660 மீ. நீளத்தில் 3 மீ. x 3 மீ. அளவில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகாலினைப் பார்வையிட்டார். பெருங்குடி மண்டலத்தில், வார்டு-188க்குட்பட்ட மயிலை பாலாஜி நகர் பகுதியில் ரூ.6.48 கோடி மதிப்பீட்டில் 235 மீ. நீளம் மற்றும் 13 மீ. அகலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கால்வாய் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் 207 மீ. நீளம் மற்றும் 14.40 மீ. அகலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றொரு கால்வாய் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார். இக்கால்வாய்கள் வேளச்சேரி, மேடவாக்கம் சாலைப் பகுதியில் உள்ள கால்வாயின் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு சென்றடைந்து, ராம் நகர், குபேரன் நகர், சதாசிவம் நகர் போன்ற குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர்த் தேக்கமின்றி வெளியேற உதவுகின்றன. மேலும், வார்டு-189க்குட்பட்ட நாராயணபுரம் ஏரியில் நீர்வளத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியினையும், தண்ணீர் வெளியேற்றும் மதகு மற்றும் கால்வாயின் கட்டமைப்பினையும் பார்வையிட்டார். ரேடியல் சாலை முதல் பெருங்குடி குப்பைக் கிடங்கு வரையிலான நெடுஞ்சாலைதுறையின் சாலைப் பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் உள்ள நீர் எளிதில் வெளியேறும் வகையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி மற்றும் 17 கல்வெர்ட்டுகள் வழியே மழைநீர் தங்குதடையின்றி பக்கிங்ஹாம் கால்வாயில் செல்லும் வகையில் ஆகாயத்தாமரைகளை அகற்றி வண்டல்கள் தூர்வாரிடவும் அறிவுறுத்தினார். சோழிங்கநல்லூர் மண்டலத்தில், வார்டு-193க்குட்பட்ட துரைப்பாக்கம், ஓ.எம்.ஆர். சாலைப் பகுதியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் ரூ.73 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினையும், ஒக்கியம் மடுவு கால்வாயில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்திடவும், ஆகாயத்தாமரை அகற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை குடிநீர் வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திடவும், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பாக மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் திரு.சுஞ்சோங்கம் ஜாதக் சிரு, இ.ஆ.ப., நீர்வளத்துறை செயலாளர் திரு.பிரசாந்த் எம். வட்னேரே, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., உள்ளிட்ட பல உயர் அலுவலர்கள் ஆய்வின்போது உடனிருந்தனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.
- 2மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை குடிநீர் வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
- 3அடையாறு மண்டலத்தில் ரூ.13.52 கோடி மதிப்பீட்டில் 660 மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்.
- 4பெருங்குடி மண்டலத்தில் ரூ.6.48 கோடி மற்றும் ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் கால்வாய் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்.
- 5நாராயணபுரம் ஏரி, ரேடியல் சாலை கல்வெட்டுகள் மற்றும் ஒக்கியம் மடுவு கால்வாயில் ஆகாயத்தாமரைகளை அகற்றி, தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்.
- 6சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ரூ.73 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து பக்கிங்ஹாம் கால்வாயுடன் இணைக்கும் மழைநீர் வடிகால் பணியினை ஆய்வு.